ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல்: இராணுவத்தின் இரண்டு லெப்டினன் கேர்ணல்கள் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப் பத்திரிகை கையளிப்பு

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேர்ணல்கள் இருவர் உட்பட  இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கும் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை கையளித்ததுடன் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

10 வருடங்களாக இடம்பெற்ற மிக நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த 9 பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெளிநாடு செல்வது விஷேட மேல் நீதிமன்றினால்  தடைசெய்யப்பட்டு அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்கவும்  உத்தரவிடப்பட்டது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே இவ்வாறு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டது.