மன்னாரில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் பரிதாபமாக பலி….!

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (வயது-23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளஞர் சக மீனவருடன் தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றபோது அவரே படகினை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இளைஞன் திடீரென படகில் இருந்து கடலில் வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சக மீனவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்ததோடு, சக மீனவர்களுக்கும் தகவல் வழங்கினார்.
விரைந்து வந்த சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் உயிரிழந்த நிலை குறித்த இளைஞன் மீட்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்