பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சிறிலங்கா…..!

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச புதிய அமைச்சரவையை அமைத்துள்ள போதும், பாதுகாப்பு அமைச்சராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை.
புதிய அமைச்சரவை பதவியேற்றதும் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சுக்களின் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சு இடம்பெற்றிருக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சராகவும் தானே பதவி வகிப்பேன் என்று சிறிலங்கா அதிபர் தமது முதல் உரையில் கூறியிருந்தார். எனினும், அவர் பாதுகாப்பு அமைச்சை இன்னமும் பொறுப்பேற்கவில்லை.
இதனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லாமல், பாதுகாப்புச் செயலராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவே பாதுகாப்பு அமைச்சை வழிநடத்துகிறார்.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது.
இந்த அரசியலமைப்பு நெருக்கடியினாலேயே, பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வேறெவரையும் நியமிக்காமல், தானும் பொறுப்பேற்காமல் இருக்கிறார் சிறிலங்கா அதிபர்.
இந்த நிலையில், இந்தச் சிக்கல் தொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை அவர் கோரக் கூடும் என்றும் அல்லது, ஆயுதப் படைகள் விவகாரத்தை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாளை புதிதாக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அல்லது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.