தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்விற்கு இந்தியா வலியுறுத்தும்! என் சீ.வி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் இந்திய விஜயத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிகை வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட கேள்வி, பதில் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிகபட்டுள்ளதாவது,
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது. அத்துடன் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு.
அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளதாகவும், அந்தவகையில் நாட்டின் புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா வழங்கும் என தான் ஆழமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் செய்யும் என தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள் எனவும் குறிப்பிட்ட அவர், ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையும் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இறுதி தீர்வு தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும் என்பதோடு, ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.