மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும்!

மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ வலியுறுத்தியுள்ளார்.
வொசிங்டனில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்,
“தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது.
பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிப்படுத்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
ஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு ஏற்ற, ஒரு சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான ஜனாதிபதி தேர்தலின் மூலம் இலங்கை தனது ஜனநாயகத்தின் வலிமையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது.
அமைதியான தேர்தலை ஊக்குவித்ததற்காக இலங்கை தேர்தல் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை நாங்கள் பாராட்டுகிறோம்.
இலங்கை ஒரு மதிப்புமிக்க பங்குதாரராக உள்ளது.
அனைத்து நாடுகளும் வளரக் கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வளர்ப்பது, நல்லாட்சியை ஆழப்படுத்துவது மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.