கோத்தபாய இந்தியாவுக்கு வரக்கூடாது!

கோத்தாபய ராஜபக்சவை இந்தியாவுக்கு வரக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் திருமாவளவன்.

கோத்தாபய 29-ம் திகதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபாயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது.

இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி இன்றைய தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐநா தீர்மானத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. போர்க்குற்ற விசாரணையை நடத்த மாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே அரணாக இருக்கின்ற இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்குத் துணைபோவது ஒட்டுமொத்த தமிழர்களையும் வருத்தம் அடைய வைத்துள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும், கோத்தபாயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டுமென்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவையில் திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்குதல், கைது அதிகரித்துள்ளதாகவும், கடந்தாண்டு ஒரு மீனவர் கூட கைது செய்யப்படாத நிலையில் நடப்பாண்டில் மட்டும் 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.