நாடளாவிய ரீதியில் ஏமாற்றத்திற்குள்ளான 7,000 இளைஞர் யுவதிகள்

நாடளாவிய ரீதியில் அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நியமனம் வழங்கப்பட்டதை காரணம் காட்டி, அவர்களின் நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் , அதை மீள வழங்குவது பற்றி இதுவரை எந்த அறிவித்தலும் வெளியாகவில்லை.
நாடளாவிய ரீதியில் அண்மையில் 7,000 பேருக்கு செயற்திட்ட உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

அவர்கள் கிராமசேவகரிற்கு உதவியாளராக செயற்படுவதென்றும், அவர்களிற்கு மாதாந்தம் 15,000 ரூபா சம்பளமென்றும் குறிப்பிடப்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினமான செப்ரெம்பர் 16ம் திகதியிடப்பட்ட நியமன கடிதத்தை தேர்தலின் பின்னரே அனுப்பி வைத்தனர்.
நியமனம் பெற்றவர்கள் மாவட்ட செயலகங்களிற்கு சென்றபோது, தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தலையிட்டு, அந்த நியமனத்தை இடைநிறுத்தியதுடன், தேர்தலின் பின்னர் நியமனம் பெற்றுக்கொள்ளலாம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நேற்றையதினம் மாவட்ட செயலகங்களிற்கு, நியமனம் பெற்றவர்கள் சென்றனர்.
எனினும், அவர்களின் நியமனம் குறித்த மறுஅறிவித்தல் வெளியாகவில்லையென குறிப்பிட்டு, திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக வேலையற்றிருந்து, அண்மையில் நியமனம் பெற்று, அதுவும் இறுதிநேரத்தில் இல்லாமல் போனதில் பல இளைஞர் யுவதிகள் ஏமாற்றத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.