யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையால் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் 32வது ஆண்டு நினைவேந்தல்!

1987ல், யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் புகுந்து கடமையிலிருந்த 21 மருத்துவப்பணியாளர்களை – இந்திய அமைதிப்படை, படுகொலை செய்த 32வது ஆண்டு நினைவேந்தல் மீட்டப்படுகின்றது! 1987 அக்டோபர் 21 இலங்கையில் தீபாவளி விடுமுறை நாளாகும்.

அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் இந்நாட்களில் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

அன்றைய நாட்களில் நடந்தவை பற்றிய விபரம்:

* அக்டோபர் 21, 1987

முப 11:00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பகுதியை நோக்கி இந்திய இராணுவத்தின் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்குதல்களும் ஆரம்பமாயின.

முப 11:30 மணி – மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.

பிப 13:00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது.

பிப 13:30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

பிப 14:00 மணி – விடுதலைப் புலிகள் சிலர் மருத்துவமனையில் நடமாடியது தொடர்பாக மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. தலைமை மருத்துவ அதிகாரி மற்றொரு மருத்துவருடன் (மரு. கணேசலிங்கம்) சென்று அவர்களை வெளியேறும் படி கேட்டுக் கொண்டார் என்றும் அவர்களும் வெளியேறினர் என்றும் கூறப்பட்டது..

பிப 14:00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

பிப 16:00 மணி – ஆசுபத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர். மருத்துவமனையில் இருந்து எவ்வித துவக்குச் சூடுகள் எதுவும் ஏவப்படவில்லை என்பது அனைத்து தரப்பினராலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

மாலை 16:20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர்.

அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.

இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர்.

ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

இன்னும் ஒருவரின் கூற்றுப் படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.

8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.

இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.

திரும்பிய திசை எங்கும் குருதி வெள்ளத்தில் தமிழரின் பிணங்கள் மிதந்தன.

**அக்டோபர் 22, 1987

காலை 08:30 மணி – மரு. சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம். எம்மை சுட வேண்டாம்!” எனக் கத்தியபடி சென்றனர்.

ஆனால் வெறி கொண்ட இந்திய இராணுவம் அவர்கள் மீது வைத்தியர்கள் தாதிகள் என கூட பார்க்காமல் துப்பாக்கிச் சூடுகள் நடத்தின. இந்த கொடிய நிகழ்வில் வைத்தியர் மரு. சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.

முப 11:00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை பணிவோடு விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார்.

அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர்.

வெளியேறும் போது அவர்கள் மருத்துவர் கணேசரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.

இது பற்றி விளக்கம் கேட்டால் மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் பொய்களை தெரிவித்தது. .லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால், இத்தாக்குதல் “தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள்” என விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசு இத்தாக்குதலை “மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்” என 2008 ஆம் ஆண்டில் கூறியது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் “இது ஒரு மனிதப் படுகொலைகள் “எனக் கூறியுள்ளனர்.

மக்களை காக்கவல்லவா அமைதி படை என வந்த ஒரு நாட்டின் இராணுவம் முன் வந்து முனைய வேண்டும்?

அதை விடுத்து கேட்டு கேள்வி இன்றி சரணடைந்த வைத்தியர் தாதியரையே கொன்ற கொடியவர்கள் எழுந்து ஓட முடியாமல் படுக்கையில் இருந்த நோயாளிகளையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள்!

மறக்க முடியாத வலி சுமந்த நாட்கள் அவை!

தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, மற்றும் மனித உரிமைக் குழுக்கள் போன்றவை இப்படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறியுள்ளன.

அதை விட கொடுமை ராஜீவ் கொலை பற்றி பேசுபவர்கள் ராஜீவின் படையினர் நிகழ்த்திய இந்த கொடிய தாக்குதலை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் எவரும் இந்திய அரசால் கைது செய்யப்படவில்லை என்பதற்கு என்ன காரணம் என விசாரிக்கவும் இல்லை. வருந்தவும் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

ஆனால் வல்லரசு என கூறும் இந்தியா இலங்கை என்ற சிறிய தீவின் சிறு புள்ளியான தமிழர் தாயகத்தில் வாழும் ஈழ தமிழர்களாகிய எங்கள் மக்களின் மக்கள் சக்தியின் பேரெழுச்சி போராட்டத்தினால் எங்கள் மண்ணை விட்டு அன்று விரட்டப்பட்டதும் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றே!

ஆக்கிரமிப்பாளர்கள் வல்லரசுகளானாலும் நீதிக்காக எதிர்த்து போராடும் மக்கள் சொந்த மண்ணில் விடுதலைக்காக போராடுகையில் அவர்களின் பலம் வலிமையானது.

மறக்க மாட்டாத மன்னிக்க முடியாத இந்த படுகொலைகள் தரும் வலிகளிலேயே நாம் உயிர்த்தெழுகின்றோம்!\\
பதிவு : ஆதவன் ஞானா