சிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக- ‘கலாநிதி’ சேரமான்

16.11.2019 அன்று நடைபெறவிருக்கும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தென்னிலங்கையிலும், தமிழீழ தாயகத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்டுப்பணம் செலுத்துவதற்கும், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குமான கால அவகாசம் நிறைவடைந்து விட்ட நிலையில் இப்பொழுது தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆறு தெரிவுகள் தான் இருக்கின்றன.

முதலாவது தெரிவு சீனாவின் அரவணைப்பைப் பெற்றவரும், தமிழினப் படுகொலையாளியுமான கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பது. யுத்த காலத்தில் சிங்களப் படைகளின் துணைப்படைகளாக இயங்கிய ஒட்டுக்குழுக்களும், அவர்களின் அடிவருடிகளும் இதற்கான பரப்புரைகளைத் தமிழீழ தாயகத்தில் மும்முரமாக முன்னெடுத்துள்ளன.

ஆனாலும் மானமுள்ள எந்தத் தமிழனும் இதற்கு இணங்கப் போவதில்லை. முற்றுமுழுதாக சிங்களவர்களின் வாக்குகளுடன் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெறுவது என்பது வேறு விடயம். ஆனால் தமிழ் மக்களின் ஆதரவுடன் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெறுவது என்பது அவர் அரங்கேற்றிய தமிழின அழிப்பை தமிழர்களே மூடி மறைப்பதாக அமையும்.

தவிர கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து விட்டால் மீண்டும் இராணுவ அடக்குமுறையும், காணாமல் போதல்களும் அதிகரிக்கும் என்ற அச்சமும் தமிழ் மக்களில் கணிசமானவர்களுக்கு உண்டு. தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள பின்புலத்தில் தமிழீழ தாயகத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைளில் சிங்களப் படையினர் ஈடுபட்டிருப்பது இந்த அச்சத்தை வலுவடைய வைத்துள்ளது.

இரண்டாவது தெரிவு ஜே.வி.பியின் வேட்பாளர் அனுர குமார திசநாயக்கவிற்கு வாக்களிப்பது. உதட்டளவில் சோசலிசமும், கம்யூனிசமும் பேசியவாறு காலம் காலமாக தமிழ் எதிர்ப்புவாத விசத்தைக் கக்கும் சிங்கள  பெளத்த இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. றோகன் விஜேவீரவின் காலத்தில் இருந்தே இவ்வாறு தான் ஜே.வி.பி நடந்து கொள்கின்றது.

1971ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய முதலாவது கிளர்ச்சிக்குப் பின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு பிரித்தானியாவிற்கு றோகன் வீஜேவீர வருகை தந்திருந்த பொழுது அவரை தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சந்தித்துத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவு கோரிய பொழுது, அதனை அடியோடு நிராகரித்தவர் விஜேவீர.

இந்தப் பட்டறிவின் அடிப்படையிலும், ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகளை நுணுகி ஆராய்ந்ததன் விளைவாகவும் 1979ஆம் ஆண்டு தான் எழுதிய சோசலிசத் தமிழீழத்தை நோக்கி என்ற நூலில் விஜேவீர பற்றியும், ஜே.வி.பி பற்றியும் இவ்வாறு தேசத்தின் குரல் குறிப்பிடுகிறார்:

‘முதலாவதாக நாம் சுட்டிக் காட்ட விரும்புவது என்னவென்றால், றோகன் விஜேவீரா மார்க்சிச-லெனினிசக் கொள்கைத் திட்டத்தைத் தனது அரசியல் இலட்சியமாய் வரித்துக் கொள்ளவில்லை.அதனைப் புரிந்து கொள்ளும் சிந்தனைத் தெளிவும் அவனிடம் இருக்கவில்லை.

ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டமில்லாமல், ஒரு புரட்சிகரமான இயக்கம் உருப்பெறாது என்பது லெனினின் அனுபவக் கூற்று. இந்தப் புரட்சிகரமான கொள்கைத் திட்டமானது, ஒரு சமுதாயத்தின் சரித்திர, பொருளாதார, அரசியல் அம்சங்களை ஆணித்தரமாக ஆராய்ந்து, யதார்த்த சூழ்நிலையைக் கிரகிப்பதாக அமைய வேண்டும்.

அப்படி வரிந்து கொள்ளப்படும் கொள்கைத் திட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்படும் ஓர் இயக்கம், ஒடுக்கப்படும் மக்களின் விருப்புக்களைப் பூர்த்தி செய்யும் புரட்சிகரமான தீர்வுகளைக் கொண்டிருப்பதால், அது பொதுசன இயக்கமாய் விரிந்து வளரும். சோசலிசப் புரட்சிக்கோ, ஆயுதக் கிளர்ச்சிக்கோ ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டம் அவசியம் என்பதை, எந்த மார்க்சிசப் புரட்சிவாதியும் மறுக்க முடியாது.

றோகன் விஜேவீராவோ அல்லது சனதா விமுக்தி பெரமுனையோ அப்படியான புரட்சிகரமான கொள்கைத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இனவாதமும், பிற்போக்குவாதமும், பேரினத்தேசியவாதமும் ஒன்றுகலந்த ஒருவிதத் திரிபுவாத சோசலிசத்தின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றும் அதீத ஆசையும், அவசரப் புத்தியும், முரட்டுத் துணிச்சலும் சேர்ந்த ஒரு குளறுபடியான திட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் சனதா விமுக்தி பெரமுனை. உலகப் புரட்சி வீரர்களான சேகுவேரா, மாசேதுங், கோ-சி-மின் போன்றோரின் சரித்திரப் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாத குழப்பத்துடன், புரட்சிப் பாதையில் காலடி வைத்து, சறுக்கி விழுந்த மாபெரும் அரசியல் தற்கொலை இது.’

ஜே.வி.பியின் இனவாத முகம் 1987ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களுக்கு நன்கு பரீட்சயமான ஒன்று. அமைதி காக்கும் படை என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் இந்தியப் படைகள் களமிறங்கியது, இலங்கையை இருகூறாகத் துண்டாடித் தமிழர்களுக்குத் தனிநாடு அமைத்துக் கொடுப்பதற்குத் தான் என்ற வாதத்துடனேயே 1987ஆம் ஆண்டில் தனது இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை ஜே.வி.பி தொடங்கியிருந்தது.

தவிர கடற்கோளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழீழ தாயகப் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு என்று உருவாக்கப்பட்ட சுனாமி பொதுக்கட்டமைப்பை உச்சநீதிமன்றத் தடையுத்தரவு மூலம் 15.07.2005 அன்று முடக்கியதும் ஜே.வி.பி தான். இதே ஜே.வி.பி தான் 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இருகூறாகப் பிளவுபடுத்தும் ஆணையை 16.10.2006 அன்று சிறீலங்கா உச்சநீமன்றம் பிறப்பித்ததற்கும் காரணமாகும்.

இப்படிப்பட்ட ஜே.வி.பியின் வேட்பாளரான அனுர குமார திசநாயக்கவிற்கு தமிழர்கள் வாக்களிப்பது என்பது கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதற்கு நிகரானதாகும்.

தவிர சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க களமிறங்கியிருப்பது கோத்தபாய ராஜபக்சவிற்குக் கிடைக்கக் கூடிய சிங்கள – பெளத்த இனவாதிகளின் வாக்குகளைத் திசைதிருப்பி விடும் நோக்கத்தைக் கொண்டது என்ற கருத்தும் அரசியல் அவதானிகளிடையே உண்டு.

அப்படிப் பார்த்தால் இனவாதம் என்று வரும் பொழுது இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது பட்டவர்த்தனமாகும்.

தமிழர்களுக்கு இருக்கக்கூடிய மூன்றாவது தெரிவு சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வாக்களிப்பது. தேர்தல் ஆரவாரம் தொடங்கியதுமே தமிழர் தரப்பில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

 

வரும் அதிபர் தேர்தலில் தமிழர்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றையும், இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணையையும் முதன்மைக் கோரிக்கைகளாக முன்வைத்து பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பு களமிறக்க வேண்டும் என்றும், அவ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக அனைத்து சிங்கள வேட்பாளர்களையும் நிராகரித்துத் தமது அரசியல் வேணவாவை உலகிற்குத் தமிழர்கள் இடித்துரைக்க முடியும் என்பது தான் அக்கருத்து.

இதனை முதன் முதலில் தாயகத்தில் இருந்து முன்வைத்தவர் ஈழமுரசு பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் வீரமணி அவர்களாவார்.

இந்தக் கருத்தில் பல நியாயங்கள் இருக்கத் தான் செய்தன. தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாடும் நடந்திருந்தால், இதனை செய்திருக்கலாம். அல்லது கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று தமிழர்கள் அனைவரையும் ஓரணியில் இணைக்கக்கூடிய ஒரு தலைவர் இருந்திருந்தாலும் அது சாத்தியமாகியிருக்கும்.

ஆனால் யதார்த்தம் அவ்விதம் இல்லை. இதனால் பொது வேட்பாளரை நியமிப்பதற்கான தமிழர் தரப்பின் முயற்சி கருவிலேயே கலைந்து போன கதையாக மாறிவிட்டது.

இவ்வாறான பின்புலத்தில் தான் சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறங்கியிருக்கின்றார். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மக்கள் செல்வாக்குக் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெளனித்திருக்கும் கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முதலில் வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினராகவும், பின்னர் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் தான் பதவி வகித்திருக்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தையின் திருவுடலைப் பொறுப்பேற்றது, தலைவரின் தாயாரின் பராமரிப்பில் முன்னின்று கவனம் செலுத்தியது என்று தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் சில செய்கைகளை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தாலும், தீருவிலில் உள்ள பன்னிரு வேங்கைகளின் நினைவுத் தூபியோடு தேசத்துரோகிகளுக்குத் தூபி அமைப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள், யுத்தம் முடிவடைந்ததும் சிறிது காலத்திற்கு கே.பியைத் தனது தலைவராக வரித்துக் கொண்டமையும், தமிழர்களின் தலைவருக்குரிய தேஜஸ் கே.பியிற்கு இருப்பதாக 2009ஆம் ஆண்டு ஆனி மாதம் இலண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் அறிவித்தமையும் அவர் பற்றிய பல்வேறு கேள்விகளைத் தமிழர்களிடையே உருவாக்கத் தவறவில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு பரிசுத்தமான தமிழ்த் தேசியவாதி அல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு கோமாளிக்கான பாகத்தை வகிப்பவராகவே அவரைப் பலர் கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரைப் பொது வேட்பாளராக ஏற்று அவருக்குத் தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது மடமைத்தனம் எனலாம்.

நான்காவது தெரிவு சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பது. இந்தத் தெரிவைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரும்புகின்றது. சஜித்தின் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்க நிற்பதால், அதனையே, இந்தியாவும் விரும்புகின்றது: மேற்குலக நாடுகளும் விரும்புகின்றன.

ஆனால் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு என்ன பயன் உண்டு என்ற கேள்விக்கு ஒருவரிடமும் காத்திரமான பதில் இல்லை.

சிலர் கூறுகின்றனர், கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதை விட சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வருவது தமிழர்களுக்கு நல்லது என்று. ஏனென்றால் தமிழர் வாழ்வில் நேரடியாக சஜித் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை. அவரது தந்தை ரணசிங்க பிரேமதாசா ஒரு இனவழிப்பாளன் தான். தமிழ் மக்களின் குருதிக் கறை மட்டுமன்றி சிங்கள மக்களின் குருதிக் கறையும் படிந்த ஒருவர் தான் ரணசிங்க பிரேமதாசா.

 

ஆனால் அதற்காகத் தந்தையின் வழியில் மகன் நடந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்ப்பார்க்க முடியாது என்பது தான் இவர்களின் வாதம். உண்மை தான்.

அதே நேரத்தில் தமிழர்களுக்குத் தனது தந்தை இழைத்த தவறுகளைத் திருத்துவற்கு இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுக்காது வாளாவிருக்கும் தனையனை எவ்வாறு தமிழர்கள் நம்ப முடியும்? ஒற்றையாட்சியையும், பெளத்த – சிங்கள பேரினவாதத்தையும் தனது தந்தையிடமிருந்த பெற்ற முதுசமாகச்சுமக்கும் சஜித் பிரேமதாசாவால் தமது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும், அரசியல் கோரிக்கைகளுக்கும், இனவழிப்பிற்கும் நீதியும், தீர்வு கிட்டும் என்று நம்பத் தமிழர்கள் என்ன அறிவிலிகளா?

ஐந்தாவதாகத் தமிழர்களுக்கு உள்ள தெரிவு மிகவும் நூதனமானது. இந்தத் தெரிவை முன்வைத்திருப்பவர் தமிழ் நாட்டில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மு.திருநாவுக்கரசு. அண்மையில் வெளிவந்த ஒளிப்பதிவு ஒன்றில் அவர் ஒரு நூதனமான தெரிவைத் தமிழர்களிடம் முன்மொழிந்திருந்தார்.

அதாவது சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர்கள் களமிறக்க வேண்டும். வாக்களிப்பு நாளன்று அவ்வேட்பாளரைத் தமது முதலாவது தெரிவாகவும், இந்தியாவும், மேற்குலகமும் முன்
மொழியும் வேட்பாளரைத் தமது இரண்டாவது தெரிவாகவும் தமிழர்கள் புள்ளடியிட வேண்டும். இதன் மூலம் தமது அரசியல் அபிலாசைகளையும், சம நேரத்தில் இந்தியாவினதும், மேற்குலகினதும் அரவணைப்பையும் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தான் அவரது வாதம்.

அதாவது பொது வேட்பாளர் ஒருவருக்குத் தமிழர்கள் வாக்களிப்பதன் ஊடாக முன்னணி சிங்கள வேட்பாளர்கள் இருவரும் மொத்த வாக்குகளில் ஐம்பது விழுக்காடு சக ஒரு வாக்கைப் பெறத் தவறும் பொழுது வாக்கெடுப்பு இரண்டாவது சுற்றுக்குச் செல்லும். இதன் பொழுது முன்னணி வேட்பாளர்கள் இருவரையும் தவிர ஏனைய அனைவரும் அகற்றப்பட்டு, தமது இரண்டாவது தெரிவாகத் தமிழர்கள் வாக்களித்த சஜித் பிரேமதாசா, தனக்கான முதலாம், இரண்டாம் தெரிவு வாக்குகள் கூட்டப்பட்ட நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவார்.

இது தான் மு.திருநாவுக்கரசு அவர்களின் வாதம்.

எல்லாம் சரி, யதார்த்தம் எவ்விதமாக இருக்கின்றது என்று பார்ப்போம்.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர்கள் யாரும் களமிறங்கவில்லை. இப்பொழுது அவ்விடத்தில் அரசியல் கோமாளி என்று தமிழர்களில் பலரால் கருதப்படும் எம்.கே.சிவாஜிலிங்கம் தான் இருக்கின்றார். மு.திருநாவுக்கரசு குறிப்பிடுவது போல் எம்.கே.சிவாஜிலிங்கத்தைத் தமது முதல் தெரிவாகவும், இந்தியாவும், மேற்குலகமும் விரும்பும் சஜித் பிரேமதாசாவை இரண்டாவது தெரிவாகவும் புள்ளடடியிட்டுத் தமிழர்கள் வாக்களிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இதனால் தமிழர்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகின்றது?

ஒரு கதைக்கு இந்தியாவினதும், மேற்குலகினதும் அழுத்தம் காரணமாக தமிழர்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வை வழங்குவதற்கும், இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணையை ஏற்பாடு செய்வதற்கும் சஜித் பிரேமதாசா இணங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

சரி, ஆட்சிக்கு வந்தவுடன் அதனை அவரால் செயற்படுத்தவா முடியும்? அதனை செயற்படுவதற்குக் குறைந்த பட்சத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாவது அவருக்குத் தேவை. எந்தவொரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு நீதியும், அரசியல் தீர்வும் கிட்டும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய மிதவாதச் சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள நாடாளுமன்றில் கொலுவிருக்கப் போவதில்லை.

இவ்விடத்தில் இன்னொரு கேள்வி எழலாம். இந்தியாவும், மேற்குலகமும் வழங்கும் உத்தரவாதத்தின் அடிப்படை
யில் சஜித் பிரேமதாசாவைத் தமிழர்கள் வெற்றியீட்ட வைத்தால், அதன் பின்னர் தனது வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், இது விடயத்தில் இந்தியாவிடமும், மேற்குலகிடமும் தமிழர்கள் நீதிகோரலாம் தானே?

கோரலாம்.ஆனால் நீதி கிட்டுமா என்பது தான் இங்குள்ள மிகப் பெரும் கேள்வியே. கடந்த தடவையும் இந்தியாவினதும், மேற்குலகினதும் பக்கபலம் தமக்கு உண்டு என்று நம்பித் தான் மைத்திரிபால சிறீசேனவையும், ரணில் விக்கிரமசிங்கவையும், இரா.சம்பந்தரையும் தமிழர்கள் வெற்றியீட்ட வைத்தார்கள். அதனால் தமிழர்களுக்கு கிட்டிய நன்மை தான் என்ன?

அல்லது இன்று சிரியாவின் ரொஜாவா மாநிலத்தில் குர்தி மக்களை அமெரிக்கா நட்டாற்றில் கைவிட்டது போல் தமிழர்களையும் இந்தியாவும், மேற்குலகமும் கைவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தமிழர்கள் என்ன முட்டாள்களா?

இவ்வாறான சூழமைவில் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய கடைசியும், மிகச் சிறந்ததுமான தெரிவு சிங்கள தேசத்து அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது தான். இந்நிலைப்பாட்டைத் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ளது. இந்நிலைப்பாட்டைப் பின்
பற்றுவதால் தமிழ் மக்களுக்குக் கிட்டக் கூடிய அரசியல் நன்மைகள் பற்றி அடுத்த தொடரில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

 

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

பாகம் – 01

பாகம் -0 2

பாகம் -0 3