ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒரணியில் ஒன்று தனித்து நிற்கிறது! – கோபி இரத்தினம்

இலங்கைத் தீவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் தொடர்பில் தமிழ் அரசியற் கட்சிகள் ஒரணியில் நின்று முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது.  அவ் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் கட்சிகளை அழைத்து ஒரு மேசையிலிருந்து பேசுவதற்கான வாய்ப்பினை வடக்கு – கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்
ஏற்பாடு செய்தனர். ஐந்து தினங்களாக யாழ் நகரில் அமைந்திருக்கிற Bright Inn விடுதியில் ஆறு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் முடிவில் இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஆறு கட்சிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணிஆகிய ஐந்து கட்சிகள் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளபோதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையொப்பிட மறுத்து விட்டது. ஆறு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் அதிபர் தேர்தலை அணுகுவது என்பது தமிழ் மக்களை நலனை முன்னிறுத்தி தமிழ்க்கட்சிகள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களைக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம் தமிழ்த் தேசிய நிலைபாட்டில் உறுதியாக இருக்கும் என எதிர்பார்த்த ஒரு கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இவ்வாறான ஒற்றுமை முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதது அவர்களை விசனத்துக்கு உள்ளாக்கியிருக்கலாம்.

இருப்பினும் அரசியலை ஒற்றை தளத்தில் நின்று மேலெழுந்தவாரியாக பார்க்கமுடியாது. என்பதால் நாம் இப்பேச்சுவார்த்தையில் நடைபெற்ற விடயங்களை முழுமையாக கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஐந்து கட்சிகளும் இணங்கிக் கொண்ட அறிக்கையில் “தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதனையும், மரபு வழித் தாயகம் என்பதனையும் அங்கீகரித்து, அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து, சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ்  ஏற்படுத்தப்பட வேண்டும்” என்பதனை தமது நிலைப்பாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த விடயங்களில் முரண்பாடான கருத்துகளைக் கொண்டிருந்த தமிழரசுக்கட்சியும் அதன் பங்காளிகளும் உடன்பட்டு கையொப்பமிட்டிருக்கையில், இவ்விடயங்களில் சமரசத்திற்கு இடமில்லை எனத் தொடர்ந்து கூறிவந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மறுத்திருப்பதுதான் இங்குள்ள முரண்நகை. அதுபற்றி நாம் சற்று விரிவாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஈழத்தமிழ் மக்களை ஓரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என முன்னணி அது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிலுருந்து கூறிவருகிறது.

ஆனால் அச்சொல்லை நிராகரித்து வந்த தரப்புகள் இப்போது தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதனை வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றன என்றால் முன்னணியின் அரசியற் கொள்கைகளை பெயரளவிலாவது பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா நாடாளுமன்றதில் ஒரு
அங்கத்தவரையாவது கொண்டிருக்காத முன்னணி இதனை வெளியிலிருந்து சாதித்திருக்கிறது

என்றால், மக்கள் அக்கொள்கைகளை வலியுறுத்தும் நிலைக்கு வந்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது. ஆகவே முன்னணியின் கொள்கைகளை ஏனைய கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தயாராகின்றபோது, அக்கட்சி முரண்டு பிடிப்பதேன் என்ற கேள்வி இயல்பாகவே யாருக்கும் எழக்கூடும்.

இக்கேள்விக்கு விடைகாண்பதற்கு, மேற்படி அறிக்கை யாரை நோக்கியது என்று பார்ப்போம். சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் சர்வதேச சமூகத்தைநோக்கியும் இவ்வறிக்கை விடப்படுகிறது என்று வைப்போம். இத் தேர்தலில் போட்டியிடும் முப்பந்தைந்து வேட்பாளர்களில் சிவாஜிலிங்கம் ஒருவரைத் தவிர வேறெவரும் இந்த அறிக்கையில் உள்ள விடயங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலகுமாறு அவர் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியே வலியுறுத்துகிறது.

இந்நிலையில் அவரை நோக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்க முடியாது. தவறிnஅவருக்கு ஆதரவு வழங்குவதென இக்கட்சிகள் முடிவெடுத்தாலும் அவர் வெற்றி பெறப்போவதில்லை என்பதனை இக்கட்சிகள் நன்கறியும்.

இத்தேர்தலில் முன்னிலையில் இருக்கும் கோத்தாபாய இராஜபக்சவும், சஜித் பிரேமதாசவும் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதனை முன்வைத்தே பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள்.  இந்நிலையில் இவ்விருவரும் இவ்வறிக்கைய உதாசீனப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தேர்தலைப் புறக்கணிப்பதனைத் தவிர இக்கட்சிகளுக்கு வேறு தெரிவுகள் இருக்காது. ஆனால் இக்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதனை ஒரு தெரிவாகக் கூட பரிசீலனை செய்யத் தயாராகவில்லை. இவற்றிலிருந்து இக்கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புடைய ஒரு வேட்பாளரை ஆதரிக்க முற்படுகின்றன என்பது தெளிவாகிறது.

இவ்விடயத்தில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றை ஐந்திலிருந்தும் வேறுபடுகிறது. ஒற்றையாட்சியை நிராகரிப்பதாகக் குறிப்பிடும் மேற்படி ஐந்து கட்சிகளும் ரணில் அரசாங்கத்தின் அரசியல் யாப்பு யோசனைகள் (அல்லது வரைபு) தொடர்பில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனையவை மேற்படி வரைபு ஒற்றையாட்சி முறையை வலியுறுத்தவதாகக் கூறுகினறன, தமிழரசுக்கட்சியோ மேற்படி வரைபு கூட்டாட்சிக்குரிய (சமஷ்டி) கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கூறிவருவதுடன், தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வின் அடிப்படையாக இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. மற்றைய கட்சிகள் தாம் இவ்வரைபினை ஏற்றுக்கொள்ளவில்லை என வெளிப்படையாகக் கூறினாலும் அதனை அறிக்கையாக வெளியிடத் தயாராகவில்லை என்பதனை கடந்த ஐந்து தினங்களாக இக்கட்சிகளுக்கிடையிலான பேச்வார்த்தையில் வெளியிடப்பட்ட கருத்துகள் புலப்படுத்துகின்றன.

ரணில் அரசின் அரசியல் யாப்பு நகலினை முற்றாக நிராகரிப்பதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையை ஏனைய
கட்சிகள் கூட்டாக நிராகரித்திருக்கின்றன. அறிக்கையில் குறிப்பிடாவிட்டாலும், கையெழுத்திட்ட கட்சிகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாப்பு நகலை நிராகரிக்கிறது என்பதனை அடிக்குறிப்பாகவாவது போடுமாறு முன்னணி கோரியது. அதற்கு இப்பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய சிவில் சமூக பிரதிநிதிகள் உடன்பட்ட போதிலும் மற்றைய கட்சிகள் உடன்படவில்லை. இதுவே முன்னணி அறிக்கையில் கையொப்பமிட மறுத்தமைக்கான காரணமாக அமைந்தது.

இத் தேர்தலில் போட்டியிடும் ஒரே ஒரு வேட்பாளர் மாத்திரம், தான் வெற்றிபெற்றால் ரணில் அரசு முன்னெடுத்த புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் நடவடிக்கையை தொடர இருப்பதாகக் கூறிவருகிறார். முதனிலை வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவே இவ்வாறு கூறிவருபவர். ரணில் அரசின் வரைபு, சிறிலங்கா தலைவர்களுடான தமது பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக அமையும் என சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கூட்டறிக்கையில் ஒப்பமிட்ட தரப்புகள் அரசியலமைப்பு நகலை நிராகரிப்பதாக குறிப்பிடுவதற்கு மறுத்துள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கையில் அறிக்கையில் ஒப்பமிட்ட தரப்புகள் எத்திசையை நோக்கி நகர்கின்றன என்பதனை ஊகித்துக் கொள்ள முடிகிறது. இருப்பினும் அதனை வெளிப்படையாக சொல்வதற்கு அவை தயக்கம் காட்டி வருவதற்கு மேற்படி வேட்பாளர் தன்னை ஒரு சிங்களத் தேசியவாதியாக வெளிப்படுத்தி வருவதே காரணமாக அமைந்துள்ளது. தேர்தல் அண்மிக்கும் நாட்களில் இக்கட்சிகளிலிருந்து இன்னொரு அறிக்கை வெளிவரும். அது சஜித்தை ஆதரிக்குமாறு மக்களை வேண்டுவதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.