மொத்தத்தில் ‘ஆடை’ ஆபாசமில்லா அர்ப்பணிப்பு-அமலாபால்

அமலாபால், சரித்திரன், விவேக் பிரசன்னா, ரம்யா ஆகியோர் ஒரு டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மறைவிடத்தில் கேமரா வைத்து பொதுமக்களிடம் நடித்து ஏமாற்றும் பிராங்க் நிகழ்ச்சி செய்கிறார்கள். தொப்பி தொப்பி எனப்படும் அந்த பிராங்க் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. அமலா பாலின் அம்மா ஸ்ரீ ரஞ்சனி அவரை ஒரு சராசரி பெண் போல இருக்க சொல்கிறார். ஆனால் அமலா பாலோ நவ நாகரீக பெண்ணாக மது, புகை, ஆண் நண்பர்கள், திமிரான நடவடிக்கைகள் என தன் மனம் போல இருக்கிறார். பந்தயம் கட்டி அதில் ஜெயிப்பது அமலா பாலின் குணம்.

அமலாபால், ரம்யா

ரம்யாவிடம் தான் நிர்வாணமாக செய்தி வாசித்து காட்டுகிறேன் என்று பந்தயம் கட்டுகிறார். பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டியில் நண்பர் ஒருவர் போதைப்பொருள்களை கலந்துவிட சுயநினைவு இல்லாமல் செல்கிறது. விழித்து பார்த்தால் ஆள் இல்லாத கட்டடத்தில் நிர்வாணமாக கிடக்கிறார். அமலா பாலை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? விளையாட்டுக்கு என நடத்தப்படும் பிராங்க் நிகழ்ச்சிகளால் என்ன மாதிரியான ஆபத்துகள் விளைகின்றன என்பதே படம்.

தமிழ் சினிமாவில் யாரும் செய்ய துணியாத அளவுக்கு சுமார் ஒரு மணி நேரம் நிர்வாணமாக நடித்து இருக்கிறார் அமலா பால். கதைக்கு உண்மையிலேயே தேவைப்பட்டு இருக்கிறது. தன் மானத்தை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பதற்றத்தை தேர்ந்த நடிப்பால் படம் பார்க்கும் நமக்கும் தொற்றிக்கொள்ள வைக்கிறார் அமலா பால். அவருக்கு பாராட்டுகள். அதேபோல் அந்த நிர்வாண காட்சிகளை துளிகூட விரசமோ ஆபாசமோ இல்லாமல் படம் பிடித்து இருக்கிறார்கள் இயக்குனர் ரத்னகுமாரும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும். அவர்களுக்கும் பாராட்டுகள்.

அமலாபால், விவேக் பிரசன்னா

அமலா பாலுக்கு நாயகிகள் ஏற்றுக்கொள்ள யோசிக்கும் கதாபாத்திரம். நல்லது, கெட்டது இரண்டும் கலந்த கதாபாத்திரம். சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அமலா பாலின் நடிப்பு நம்மையும் சேர்த்து திகிலாக்குகிறது. அமலாபாலுக்கு நண்பர்களாக ரம்யா, சரித்திரன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீ ரஞ்சனி நம் வீட்டு அம்மாக்களை பிரதிபலிக்கிறார். படத்தில் சவுக்கடி வசனங்கள் பல இடம் பெற்றுள்ளது.

வசனத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்தங்களும் சமூக அக்கறையும் உள்ளது. ஆனால் இரண்டுமே வலிந்து திணிக்கப்பட்டு இருப்பது படத்தின் பலவீனம். பிரதீபின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கதையுடன் ஒன்ற வைக்கிறது. ‌ஷபீக் முகமது அலி படத்தொகுப்பில் காட்சிகள் நீளமாக தெரிகின்றன. 20 நிமிடங்கள் வரை குறைத்து இருக்கலாம்.

அமலாபால்

இறுதிக்காட்சியில் சொல்லப்படும் கருத்து அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இன்னும் நம்பகத்தன்மையை கூட்டி இருக்கலாம். பிராங்க் நிகழ்ச்சிகளை குறை சொல்வதற்கு பதிலாக பெண்களின் நடத்தையை படம் குறை சொல்கிறதோ என்ற தோற்றம் எழுகிறது. சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம். அமலா பாலின் அர்ப்பணிப்பே ஆடையை தாங்குகிறது.

மொத்தத்தில் ‘ஆடை’ ஆபாசமில்லா அர்ப்பணிப்பு.