சம்பந்தரின் செயல் வழி இறுகி விட்டதா?

தமிழரசுக் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் சம்பந்தர் பேசியது துலக்கமற்றது என்றாலும் அது ஒரு தேர்தல் உத்திதான். அதை கூட்டமைப்பின் ஊடகங்கள் உருப்பெருக்குவதும் ஒரு தேர்தல் உத்திதான்.

அதேசமயம் மனோ கணேசன் அது தொடர்பாக பின்வருமாறு கூறியிருக்கிறார்… “சம்பந்தருக்கு வயதாகிவிட்டது. எதிர்பார்ப்புகள் சுக்கு நூறாகி விட்டது. ஒரே நாட்டுக்குள் வாழ்வோம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்தார். ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏன் ஏற்றார் என்றால் இலங்கையின் ஆட்சிக்குள் தமிழ் மக்கள் வந்துவிட்டதை நாட்டுக்கு காண்பிப்பதற்காகவே. எனினும் எவரும் அதனை உணரவில்லை. தனி நாடு தேவையில்லை இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஆயுதங்களை கையில் எடுக்க மாட்டோம் என்றார்.

அவற்றைக் கைவிட்டு வந்த பிறகு நாங்கள் என்ன கொடுத்தோம்? எதையும் கொடுக்காமல் அவர்களை வெறுங்கையுடன் வடக்கு கிழக்குக்கு அனுப்பி வைத்தோம். அதனால் அவர் சோர்வுற்று பேசியுள்ளார்” என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய மனோ கணேசன் கூறியதன் ஒரு பகுதியை வேறுவிதமாக சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வைத்து டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.

“இந்த அளவுக்கு விட்டுக் கொடுத்த கடைசி தமிழ்த் தலைவராக சம்பந்தர்தான் இருப்பார். அவரோடு ஒரு தீர்வுக்கு போங்கள்” என்று யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது டிலான் பெரேரா கூறினார்.

மனோ கணேசன், டிலான் பெரேரா ஆகியோர் கூறியவற்றுள் ஒரு பகுதி உண்மை உண்டு. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலப் பகுதிக்குள் ஆகக் கூடிய பட்சம் சிங்களத் தலைவர்களுக்கு விட்டுக்கொடுத்த ஒரு தமிழ்த் தலைவராக சம்பந்தரே காணப்படுகிறார்.

சிங்களத் தலைவர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் தலைவர்களுக்கும் அதிகபட்சம் விட்டுக் கொடுத்த ஒரு தலைவராகவும் அவர் காணப்படுகிறார்.

வடக்கு கிழக்கில் தனது வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது வீராவேசமாக பேசும் சம்பந்தர் தென்னிலங்கையிலும் சிங்கள முஸ்லிம் தலைவர்களோடு கூடிய மட்டும் விட்டுக் கொடுத்தார்.

ஏன் அவர் அப்பச் செய்தார்?

விட்டுக்கொடுப்பற்ற ஓர் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப்பின் ஆகக் கூடிய பட்சம் விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவராக அவர் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பினாரா? அதன் மூலம் உலக சமூகத்துக்கும் சிங்களத் தலைவர்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் தன்னை ஒரு மென் சக்தியாக காட்டிக்கொள்ள அவர் முயற்சித்தார்.

கடந்த பத்தாண்டுகளாக அவர் எங்கெல்லாம் விட்டுக் கொடுத்திருக்கிறார்? எப்படியெல்லாம் விட்டுக் கொடுத்திருக்கிறார்? யார் யாருக்கு விட்டுக் கொடுத்தி ருக்கிறார் என்று பார்த்தால் இது தெரிய வரும்

முதலில் ராஜபக்சவுக்கு விட்டுக் கொடுத்தார். அதன் மூலம் அவரோடு ஒரு தீர்வுக்கு வரலாமா என்று முயற்சித்தார். ஆனால் ராஜபக்ச அப்படி ஒரு தீர்வுக்கு வரத் தயாராக இருக்கவில்லை. அடுத்ததாக முஸ்லிம் தலைவர்களுக்கு விட்டுக் கொடுத்தார்.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு முதலமைச்சரை கொடுத்தார். கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பிடம் 11 ஆசனங்கள் இருந்தன. முஸ்லிம் கட்சிகளிடம் 9 ஆசனங்கள் இருந்தன. எனினும் சம்பந்தன் முஸ்லிம் தலைவர்களுக்கு விட்டுக் கொடுத்தார். கல்முனை விவகாரம் போன்ற விவகாரங்களை கூட அந்த இடத்தில் அவர் ஒரு பேர விவகாரமாக வைக்கவில்லை.

வடமாகாண சபையில் நியமன உறுப்பினரை தெரிவு செய்த பொழுது அதையும் முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுத்தார். அந்த நியமன உறுப்பினர் பின்னாட்களில் அவருடைய சொந்தக் கட்சியாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். இப்படியாக முஸ்லீம் தலைவர்களுக்கு அண்மை தசாப்தங்களில் அதிகம் விட்டுக்கொடுத்த ஒரு தமிழ் தலைவராக சம்பந்தர் காணப்படுகிறார்.

அடுத்ததாக, 2015இல் ஆட்சி மாற்றத்தின் போது சம்பந்தர் யார் யாருக்கெல்லாம் விட்டுக்கொடுத்தார்?

முதலாவதாக அவர் ஆட்சிமாற்றத்தை பின்னிருந்து இயக்கிய மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் விட்டுக்கொடுத்தார். ஆட்சி மாற்றத்துக்கான பேரம் பேசல்களின் போது அவர் மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை அழுத்தமாக கூறியிருக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு உதவுவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதனை ஒரு நிபந்தனையாக அவர் முன்வைக்கவில்லை.

அனைத்துலக மற்றும் பிராந்திய அளவில் ஈழத் தமிழர்களுக்கு பேரம் பேசக் கிடைத்த ஓர் அருமையான சந்தர்ப்பம் அது. ஆனால் சம்பந்தர் அச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை. மாறாக மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தன்னை அதிகம் விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவராக காட்டவே அவர் விரும்பினார்.

அன்றைக்குப் பேரத்தை முன்வைக்காமலிருந்து விட்டு இன்றைக்கு மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பொறுப்பு உண்டு என்று கூறுகிறார்.

இரண்டாவதாக அவர் தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தரப்புகளோடும் பேரம் எதையும் பேசவில்லை. பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் திருமதி சந்திரிக்கா அவரிடம் அதைப் பற்றி கேட்டிருக்கிறார்.

“கடந்த பல தசாப்தங்களாக சிங்களத் தலைவர்கள் தமிழ் தலைவர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் இவ்வாறானதொரு அனுபவப் பின்னணியில் இப்பொழுது நீங்கள் எங்களோடு எந்த விதமான ஓர் எழுத்து வடிவ உடன்படிக்கையும் இன்றி சேர்ந்து செயற்படுவது சரியா” என்று சந்திரிகா கேட்டபோது, சம்பந்தர் “எவ்வளவு மையைக் கொட்டி உடன்படிக்கை செய்கிறோம் என்பதல்ல இங்கு முக்கியம் எவ்வளவு நம்பிக்கைகளை நாங்கள் முதலீடு செய்கிறோம் என்பதே இங்கு முக்கியம்” என்ற தொனிப்பட பதில் கூறியதாக சுமந்திரன் இக்கட்டுரை ஆசிரியருக்கு ஒரு முறை தனிப்பட்ட உரையாடலின்போது கூறியிருந்தார்.

அப்பேச்சுவார்த்தைகளின் போது சந்திரிகாவுக்கு தோன்றிய ஒரு விடயம் சம்பந்தருக்கு தோன்றியிருக்கவில்லை. மாறாக அவர் அந்தக் இடத்திலும் பேரம் எதையும் முன்வைக்காமல் மஹிந்தவை அகற்றுவது என்ற ஒரு விஷயத்துக்காக மட்டும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தார்.

மஹிந்தவை அகற்ற வேண்டிய ஒரு தேவை மேற்கு நாடுகளுக்கு இருந்தது. இந்தியாவுக்கு இருந்தது. அத்தேவையை நிறைவேற்ற தமிழ்த்தரப்பு அவர்களுக்கு தேவையாக இருந்தது. இதனால் தமிழ் தரப்பின் பேரம் மிகவும் உச்சமாக காணப்பட்டிருக்க வேண்டிய ஒரு காலகட்டம் அது. ஆனால் சம்பந்தர் அத்தருணத்தை கெட்டித்தனமாக கையாளவில்லை.

அப்பொழுது மட்டுமல்லை அதற்குப் பின்னரும் அவருக்கு பல தருணங்கள் கிடைத்தன. அவற்றை அவர் முறையாக கையாள தவறிவிட்டார். கடந்த சுமார் நான்கு ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக சம்பந்தர் எவ்வளவோ விட்டுக் கொடுத்தார் – இறங்கிப் போனார். ஒவ்வொரு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் அவர் பேரம் பேசும் சக்தியை பயன்படுத்தவில்லை.

யாப்புருவாக்க முயற்சிகளின்போது அவர் தனது சொந்த மக்களையே வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றினார். சிங்கள மக்களையும் ரணிலோடு சேர்ந்து ஏமாற்றலாம் என்று நம்பினார்.

டிலான் பெரேரா கூறியதுபோல தனது தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டு யாப்புருவாக்கத்திற்காக அவர் அதிகமதிகம் இறங்கிப் போனார். பிரிவுபடாத இலங்கைக்குள், பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வைக் கண்டு பிடிக்கப் போவதாக சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்ட முயற்சித்தார்.

இதன் மூலம் சிங்கள நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் அவருக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்காக அவர் பணயம் வைத்தது அவரது சொந்த வாக்காளர்கள் அவர் மீது வைத்திருந்த நன்மதிப்பை!

அது மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்திலும் அவர் பேரம் பேசும் அரசியலை செய்யவில்லை. மனோ கணேசன் கூறுவது போல முழு இலங்கைக்குமான எதிர்க்கட்சித் தலைவராகவே அவர் தன்னைக் காட்டிக் கொண்டார்.

அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் தன்னை தமிழத் தேசியத்தின் பிரதிநிதியாக அல்ல முழு இலங்கைக்குமான தேசியத்தின் பிரதிநிதியாகவே காட்டிக் கொண்டார். இதன்மூலம் மேற்கத்தைய ராஜதந்திரிகள் மத்தியிலும் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மத்தியிலும் அவர் மதிப்புக்குரிய ஓர் இடத்தை பெற்றுக்கொண்டார்.

ஆனால் அவருடைய கட்சி தொடர்ந்து உடைந்து கொண்டே போனது. கடந்த பத்தாண்டுகளில் கூட்டமைப்பு மூன்று தடவைகள் உடைந்துவிட்டது. ஒரு தலைவராக தனது கட்சியை அவரால் காப்பாற்ற முடியவில்லை.

அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுத்து தனது மக்களின் அன்றாட பிரச்சினைகளையும் அவரால் தீர்க்க முடியவில்லை. நிரந்தர பிரச்சினைகளையும் தீர்க்க முடியவில்லை. அரசியல் கைதிகளுக்கு விடிவில்லை. காணிகளை விடுவிக்க முடியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு இல்லை. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க முடியவில்லை.

இப்படியெல்லாம் விட்டுக்கொடுத்து கடந்த பத்தாண்டுகளாக அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பையும் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் நன் மதிப்பையும் அவர் சம்பாதித்ததன் மூலம் பெற்றுக்கொண்டது என்ன?

ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின் பதவிக்கு வந்த முதலாவது மிதவாத தலைமை என்ற காரணத்தால் சம்பந்தர் அனைத்துலக சமூகத்திற்கும் சிங்கள மக்களுக்கும் தமிழ் அரசியலை குறித்து ஏற்கனவே அழுத்தமாக பதிந்திருந்தது பிம்பத்தை உடைக்க முற்பட்டாரா?

ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டமானது உலகப் பரப்பில் அழுத்தமான சில மனப்பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது. அதன்படி தமிழ் மக்கள் இலட்சியப் பிடிப்புள்ளவர்கள். தமது இலட்சியத்துக்காக சாக தயாரானவர்கள். தமது இலட்சியத்தை விட்டு கொடுத்து இறங்கி வரமாட்டார்கள்.

அதோடு தங்களை ஒரு கட்டத்துக்கு மேல் சுதாகரித்துக் கொள்ளத் தயங்கும் ஒரு மக்கள் கூட்டம் என்ற ஒரு அபிப்பிராயம் உலகப் பரப்பில் ஆழமாகப் பதி ந்துவிட்டது இந்த அபிப்பிராயத்தை மாற்றி தமிழ்த்தரப்பு எனப்படுவது விட்டுக் கொடுக்கத் தயாரான ஒரு தரப்பு சமரசத்துக்கு தயாரான ஒரு தரப்பு என்றெல்லாம் காட்டுவதற்கு சம்பந்தர் முயற்சித்தாரா ?

ஆனால் இந்த முயற்சிகளில் அவர் வெற்றி பெறவில்லை என்பதை தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஆற்றிய உரைகள் காட்டுகின்றன. அப்படியென்றால் தமிழ் மக்களின் தலைவர்கள் அதிகம் விட்டுக் கொடுத்த ஒரு காலகட்டம் தோல்வியில் முடிவடைந்து விட்டது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது தமிழ் மென் சக்தி என்பதை மிகப் பிழையாக விளங்கி அளவுக்கு மிஞ்சி வளைந்து கொடுத்து அதன் விளைவாக சம்பந்தர் இப்பொழுது அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத ஒரு முட்டுச்சந்தில் தமிழ் மக்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாரா?