வறட்சி காரணமாக திருமலையில் 8000 பேர் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக குடிநீரின்றி 8113 பேர் இன்று  வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவிப் பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார்.

 

மாவட்டத்தில்  11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆறு  பிரதேசங்கள் அதிகளளவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அதிலும்  கிண்ணியா பிரதேச செயலகத்தில் அதிகளவிலான மக்கள் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிண்ணியா பிரதேசத்தில் 903 குடும்பங்களும், வெருகல் பிரதேசத்தில் 152 குடும்பங்களும், தம்பலகாமம் பிரதேசத்தில் 102 குடும்பங்களும், குச்சவெளி பிரதேசத்தில் 467 குடும்பங்களும், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் 664 குடும்பங்களும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 169 குடும்பங்களும் மொத்தமாக 8113 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் இவர்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், வரட்சியினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.