மூன்று மாத கால அவகாசம் தேர்தலுக்கான வியூகமா?ப.இரும்பொறை

மீண்டும் போராட்டம் வெடிக்கும் மாவை அறிவிப்பு
*அரசியல் தீர்வு முயற்சிகள் குறித்த பாராளுமன்ற விவாதம்
*புதுடில்லி சென்று கூட்டமைப்பு பேசப்போவது என்ன?
* தேர்தல்கள் வரும் நிலையில் அரசியல் தீர்வு குறித்து ஆராயமுடியுமா?

அரசியலில் சில காலமாகக் காணப்பட்ட தொய்வு நிலை காணாமல்போய் மீண்டும் பரபரப்பான அரசியல் செயற்பாடுகள் சூடுபிடித்துள்ளன. கட்சிகளின் மகாநாடுகள், கூட்டணிகளை அமைப்பதற்கான இரகசியப் பேச்சுக்கள் என தொடர்ச்சியாகச் செய்திகள் வந்துகொண்டுள்ளன. சிறுபான்மையினரின் வாக்குகளை உறுதிப்படுத்துவதற்காக என்ன செய்ய வேண்டும் என பிரதான கட்சிகள் ஆலோசனைகளை நடத்திக்கொண்டுள்ளன. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாடும் முக்கியம் பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், முக்கிய தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட உரைகளும்தான் ஒரு வார காலத்தில் தமிழ் ஊடகங்களில் பிரதான செய்திகளாக இடம்பெற்றிருந்தன. ஐந்து வருடகாலமாக நடத்தப்படாத மாநாடு இப்போது அவசரமாக நடத்தப்பட்டிருக்கின்றது. அடுத்த தேர்தல்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில் ஆக்ரோஷமான பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரப்போகும் தேர்தல்களை இலக்கு வைத்ததாகத்தான் இந்தப் பிரகடனங்களும் உரைகளும் அமைந்துள்ளதா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

”எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் அரசாங்கம் நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்” என இங்கு தலைமையுரையாற்றிய தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ”இல்லையெனில், மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனவும் அறிவித்திருக்கின்றார். மாவை சேனாதிராஜாவின் இந்தக் கருத்து தமிழரசுக் கட்சியின் பிரகடனத்திலும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளையில், ”ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதே மாநாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

மகாநாட்டு பிரகடனம்
நடைமுறையாகுமா?

தமிழரசுக் கட்சியின் பிரகடனமும் பெருமளவுக்கு இதே பாணியில்தான் அமைந்திருக்கின்றது. 1976 இல் இதேபோன்ற ஒரு பிரகடனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டபோது பெருந்தொகையான இளைஞர்கள் அதற்குப் பின்னால் அணிவகுத்துச்சென்றார்கள். தமது உயிர்களை அர்பணிக்கத் தயாராக இருந்தார்கள். இப்போது, தமிழரசுக் கட்சித் தலைவர்களின் உணர்ச்சிகரமான உரைகளும், பிரகடனங்களும் யாரையுமே உணர்ச்சிவசப்படுத்துவதாக இல்லை. வெறுமனே ஒரு செய்தியாக அதனைப் படித்துவிட்டு கடந்து செல்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால், அதனை ஒரு ‘ஜோக்”காக சமூக ஊடகங்களில் பகிர்வதிலேயே எம்மவர்கள் அதிகளவுக்கு ஆர்வம்காட்டியிருப்பதையும் காணமுடிகின்றது. குறிப்பாக மாவையரின் ”மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்ற எச்சரிக்கை அவரது வழமையான உரையாகத்தான் இருந்தது.

தமிழரசுக் கட்சித் தலைவர்களுடைய உரைகளையும், அவர்களுடைய பிரகடனங்களையும் யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை இது உணர்த்துகிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. தமிழரசுக் கட்சித் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும், அவர்களுடைய பிரகடனங்களுக்கும் தொடர்பிருப்பதில்லை. மாவை சேனாதிராஜா கடந்த நான்கு வருடங்களில் எத்தனை தடவைகள் ”போராட்டம் வெடிக்கும்” என அறிவித்திருந்தாரோ, அதனைவிட அதிக தடவைகள் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு தமது வாக்கைப் பாராளுமன்றத்தில் பயன்படுத்தியிருக்கின்றார். வரவுசெலவுத் திட்டங்களை எதிர்த்து உரையாற்றுவார்கள், இறுதியில் ”கம்பெரலிய” திட்டம் கிடைக்கும் என்பதற்காக ஆதரித்து வாக்களிப்பார்கள்.

அரசியல் தீர்வில்
தொடரும் நம்பிக்கை

மைத்திரி ரணில் அரசைக் கொண்டுவருவதில் தமிழரசுக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான பங்குள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும், அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டு முதலே வெளியிட்டு வந்தது. ஒவ்வொரு வருடமும், ”வருட இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டே வருகின்றது. இப்போது கூட, இவ்வருட இறுதிக்குள் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம் என்ற அர்த்தத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்கள் சாதாரண மக்களுக்குக் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் தற்போதைய அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்கள்தான்.

எந்தவொரு அரசும் பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்குள்தான் இது போன்ற சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கொடுக்க முனையும். அல்லது வெளிநாடு ஒன்றின் கடுமையான அழுத்தம் இருக்கவேண்டும். 13 ஆவது திருத்தின் மூலம் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்டது இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாகத்தான். ஆட்சியின் இறுதிக்கால கட்டத்தில் நான்கு மாதங்களில் தேசிய அளவிலான தேர்தல் எதிர்கொள்ளப்படும் நிலையில், மாவையர் அறிவித்த போராட்டத்துக்கு அஞ்சி தீர்வு எதனையும் அரசாங்கம் கொண்டுவரப்போவதில்லை. இவ்வளவு காலமும் அரசைப் பாதுகாப்பதில் அக்கறையாக இருந்த கூட்டமைப்பு, தமிழர்கள் சார்ந்த எந்தவொரு கோரிக்கைக்காகவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக இல்லை.

ஒரே வாரத்தில் தீர்க்கக்கூடிய கல்முனைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கே கூட்டமைப்பால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியவில்லை. மக்கள் கிளர்ந்தெழுந்துகொந்தளித்த போதே அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது தேர்தல்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் கொண்டுவரும் என கூட்டமைப்புத் தலைமை உண்மையாகவே நம்புகின்றதா?

கூட்டமைப்பின்
தேர்தல் உபாயம்?

கூட்டமைப்புக்கான ஆதரவு தாயகத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதை கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உணர்த்தியது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது அதிலிருந்த தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். என்பன வெளியேறிவிட்டன. கூட்டமைப்பால் முதலமைச்சராக்கப்பட்ட விக்னேஸ்வரனும் இன்று அங்கில்லை. அதனைவிட தமிழரசுக் கட்சியிலிருந்து அதிருப்தியாளர் குழு ஒன்றும் வெளியேறிவிட்டது. கடந்த ஐந்து வருடங்களில் அரசுக்கு ஆதரவளித்து மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தது என்ன என்று சொல்ல கூட்டமைப்புத் தலைமையின் கைகளில் ஒன்றும் இல்லை.

கம்பரெலிய, பனை அபிவிருத்தி நிதியம் என்பவற்றின் மூலம் செய்யப்பட்ட வீதிப்புனரமைப்பு, மைதான விரிவாக்கம் என்பவற்றைவிட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு முயற்சி கைவிடப்பட்டுவிட்டது. இந்தப் பின்னணியில்தான் ”போராட்டம் வெடிக்கும்” போன்ற வேட்டுக்களைத் தீர்க்க வேண்டிய நிலை தமிழரசுக் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பின்
இரு முனை நகர்வு

இதனைவிட மற்றும் இரண்டு முனைகளில் கூட்டமைப்பு காய்களை நகர்த்துகின்றது. அரசியலமைப்பு உருவாக்கலுக்கு என்ன நடைபெற்றது என்பது குறித்த பாராளுமன்ற விவாதம் ஒன்று கூட்டமைப்பின் கோரிக்கையின் படி இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதான கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும் என கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. அதன்அடிப்படையில், புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமருடனும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடனும் பேச்சுக்களை நடத்துவதுதான் கூட்டமைப்பின் திட்டம். ஆகஸ்ட் நடுப்பகுதியில் டில்லிக்குச் செல்வதற்கான நேர ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன.

இரண்டு பிரதான கட்சிகளுமே ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்கள் யார் என்பதை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில்தான் அறிவிக்கப்போகின்றன. அதன் பின்னர் தேர்தலை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை மட்டும்தான் காணக்கூடியதாக இருக்கும். இந்தக் காலப் பகுதியில் டில்லி சென்று நடத்தும் பேச்சுக்களின் மூலம் தீர்வு முயற்சிகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று அடுத்த வருட முற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்ற பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைப் புதுப்பிக்க முடியும்.

கூட்டமைப்புக்கும் இது தெரியாமலிருக்காது. அவர்களுக்கு இன்றுள்ள பிரச்சினை மக்கள் செல்வாக்கை தக்க வைப்பதும், மாற்று அணி ஒன்றை உருவாகாமல் தடுப்பதும்தான். அவர்களுடைய அனைத்து நகர்வுகளும் அதனை இலக்காகக்கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.