பிரித்தானியத் தூதர் மீது அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்!

அமெரிக்காவுக்கான பிரித்தானியத் தூதர் சேர் கிம் டாரோச் பிரித்தானியாவுக்குச் சிறப்பாக சேவை செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

பிரித்தானியத் தூதரால் அனுப்பப்பட்டதாக கருதப்படும் மின்னஞ்சல்களில் அமெரிக்க ஜனாதிபதியை திறமையற்றவர், தகுதியற்றவர் மற்றும் பாதுகாப்பற்றவர் என அவர் விவரித்துள்ளார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை பிளவுபட்டுள்ளது எனவும் இந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கசிவு நெறிமுறையற்றது எனவும் தேசபக்தி இல்லாதது எனவும் மின்னஞ்சல்களைக் கசியவிட்டவர் அமெரிக்காவுடனான பிரித்தானியப் பாதுகாப்பு உறவுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயற்பட்டுள்ளார் என சர்வதேச வர்த்தகச் செயலாளர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

முக்கியமான உலகளாவிய உறவுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் மின்னஞ்சல்களைக் கசியவிட்டவரைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கமுடியுமென தாம் நம்புவதாகவும் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

ராஜதந்திரக் குறிப்புகள் அடங்கிய இந்த மின்னஞ்சல்களைக் வெளியிட்டவரை கண்டுபிடிப்பதற்கான விசாரணையை இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.