நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை-சிறிதரன்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால்  மஹிந்த ராஜபக்ஸ முன்னிலை பெற்று விடுவாா். அது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து நாம் பல விடயங்களை பெற்றுக் கொள்ளவேண்டும்.
மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறியுள்ளாா். கிளிநொச்சி – தொண்டமான் நகர் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பகல் இடம்பெற்றுள்ளது. வீதிக்கான அடிக்கல்லை சிறீதரன் நாட்டி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணியின் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பிலும் சிறீதரனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,
சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியில் இருந்துகொண்டு எமக்கு அறிவுரை சொல்ல மட்டும் தான் முடியும். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் வாக்களிக்காவிட்டால் மகிந்த ராஜபக்ச முன்னிலை பெறுவார். அதற்காக மாத்திரம் நாம் வாக்களிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பல விடயங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஒன்றுக்காக நாடு தயாராகி வரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அணி ஒன்று உருவாவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என அவரிடம் வினவிய போது,
உண்மையில் கீரைக் கடைக்கு ஓர் எதிர் கடை வேண்டும். எதிரணி ஒன்று உருவாவதற்கு பேச்சுக்கள் இடம்பெற்றன. அவை ஏன் தோல்வியில் முடிவடைந்தன என்பது தெரியாது. நாம் அவர்களிற்கு நடுநிலை வகிக்கவும் இல்லை.

ஆனாலும் மக்களிற்கு நன்மை கிடைக்கக்கூடிய வகையில் ஒன்றிணைவதை நான் வரவேற்கின்றேன். அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.