தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே ; தவிசாளர் சுரேன்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன்  தெரிவித்துள்ளார்.

பெண்கள் மேம்பாட்டு மையத்தில் ஒழுங்கமைப்பில் அதன் தலைவி சறோசா சிவச்சந்திரன் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற நிலைமாறுகால நீதி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பல்வேறு பட்ட இன்னல்களை சந்தித்து உயிர் இழப்புகளை சந்தித்து உடமை இழப்புக்களை சந்தித்து இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து மீண்டும் வந்திருக்கின்றோம் இந்த நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை  தொடர்பான விடயங்களை  வெளியுலகுக்கு கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுகின்றனர்.

ஆனாலும் அந்த முயற்சியில் ஒரு தளம்பல் நிலை காணப்படுவதாக நான் உணர்கின்றேன் ஏனென்றால் முன்பு பேசப்பட்டது போல அல்லது முன்பு இடம் பெற்றது போல இவ்விடயங்கள் தொடர்பில் யாரும் கருத்தில் எடுப்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை இவ்வாறு நாங்கள் எமது இனப்படுகொலையை சர்வதேச சமூகத்திற்கும்   எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்த தவறுமாக இருந்தால் அல்லது வெளிப்படுத்தத் தவறுவோமாக  இருந்தால் எங்கள் இனம் ஒரு நிலைமாறுகால நீதி பொறிமுறையில் எதையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஒன்று தோன்றும்.

ஆகவே அனைத்து அரசியல் தலைமைகளும் தமது மக்களினுடைய எதிர்காலத்தை நினைவில் கொண்டு எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகத்திற்கு உரத்துக் கூறவேண்டும். என்றார்