வவுனியா ஆச்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை!

வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்திற்கான உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் தாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓரு மீள்குடியேற்ற கிராமம் ஆகும். இக் கிராமத்தில் 373 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பலரும் நாளாந்த கூலி வேலை மூலம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர்.

இக்கிராமமானது அரசாங்கம் வழங்கும் சலுகைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனை வெளிப்படுத்தும் வகையில் இக் கிராமத்தின் வீதிகளும், வறுமை நிலையும் காணப்படுகின்றது.

தங்கள் கிராமத்தின் பாதைகள் மோசமாக காணப்படுவதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலைமை காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், மழை காலங்களில் மழை நீரினாலும், கோடையில் புழுதி மண்டலத்தாலும் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

கம்பரலிய போன்ற அபிவிருத்திகள் சில கிராமங்களுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்ற போதும் ஆச்சிபுரம் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் பிள்ளைகளுடன் கஸ்ரப்படுவதாகவும் கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.