தமிழர்களின் காணிகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சூறையாடுகின்றனர் – சட்டத்தரணி சுகாஷ்

தமிழ் மக்களின் காணிகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சூறையாடுவதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை கவனயீர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் காணிகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சூறையாடிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே இதை நாங்கள் தொடர அனுமதிக்க முடியாது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் போன்ற அடிப்படைவாதிகள் எங்களுடைய தமிழ் சகோதரர்களுடைய நிலங்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகின்றேன். உங்களுடைய அடாவடித்தனத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். இனியும் தமிழ் மக்களின் காணிகளை நீங்கள் சூறையாட நினைத்ததால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து கொந்தளிப்பார்கள்.

அரபு தேசியவாதத்தை இந்த மண்ணிலே விதைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்று தெரிவித்தார்.