முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – மனித உரிமை கண்காணிப்பகம்

முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் பிற முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை பிரஜைகளை பாதுகாக்கவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு, இலங்கை அதிகாரிகள் துரிதமாக முடிவை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களின் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு அதிகாரிகள், கண்மூடித்தனமாக கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையிலேயே பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேலும், தேடுதல் நடவடிக்கையின் போது அல்- குரானை வைத்திருந்தமைக்காகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும், அடிப்படை உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் உடனடியாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அந்தவகையில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் ஊடாகவே, மனித உரிமை துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவர முடியும் என்றும் மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்