பஸ்ஸை வழிமறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்; போக்குவரத்துத்தடை

வவுனியா- மன்னார் பிரதான வீதி, பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி இன்று காலை 9மணியளவில் அப்பகுதியில் சென்ற பஸ் மற்றும் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படவில்லை. பல போராட்டங்களை மேற்கொண்டும் எவ்வித நடவடிக்கையும் இன்றுவரையிலும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த தட்டான்குளம், சண்முகபுரம், வாரிக்குட்டியூர், கங்கன்குளம், மணியர்குளம் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை மேற்கொண்டனர்.

ஆட்சியாளர்களே செட்டிகுளம் பூவரசங்குளம் வீதியை உடனடியாக புனரமைத்துக்கொடு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழியேற்படுத்திக் கொடு, எமது பிரதேசத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை மரணப் பொறியில் தள்ளாதே, நாம் இருப்பது வரிப்பணம் செலுத்துவதற்கு மட்டுமா?, அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் எமக்குப்பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லை போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டனர்.

போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை உறுப்பினர் ஆர்.எச். உபாலி சமரசிங்கவிடமும், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் தமது மகஜரினைக் கையளித்து போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதி வீதியூடான போக்குவரத்து சற்றுத் தடைப்பட்டதுடன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.