கூட்டமைப்பும் ஒழுங்கில்லை: மாற்றுத் தலைமையும் ஒற்றுமையில்லை

கல்முனையில் தமிழ்மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசாங்கத்தின் செய்தியை கொண்டு சென்ற சுமந்திரன் அவமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் மனோகணேசனும் உடனிருந்திருக்கிறார்.

அந்த அவமதிப்பின் பின்னணியில் அம்பாறை மாவட்ட மக்களின் விரக்தியும் ஆவேசமும் உண்டு. அதோடு அப்போராட்டக்களத்திலிருந்த கூட்டமைப்பிற்கு எதிரான தரப்புக்களின் செல்வாக்கும் இருக்க முடியும்.

அப்போராட்டக்களத்தில் புகுந்து தமிழ் – முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முற்பட்ட தரப்புக்களும் தமிழ் மக்களை தென்னிலங்கை மையக் கட்சிகளின் வாக்கு வங்கியாக மாற்ற விளையும் தரப்புக்களும் அந்த இடத்தில் கூட்டமைப்பை அவமதிக்கத்தான் விரும்பும்.

ஆனால் இதன் அர்த்தம், இது விடயத்தில் கூட்டமைப்பிற்குப் பொறுப்பில்லை என்றில்லை. கடந்த நான்காண்டுகளாக நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளியாகக் கூட்டமைப்பு இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாத ஆட்சிக் குழப்பத்தின் பின்னிருந்து கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. எனவே அம்பாறைத் தமிழ் மக்களின் ஆவேசம் நியாயமானது.

கல்முனை விவகாரத்தில் கூட்டமைப்பின் அணுகுமுறை உரிய காலத்தில் வெற்றி பெறத் தவறியதன் விளைவே அது. கல்முனை விவகாரத்தில் மட்டுமல்ல கூட்டமைப்பின் ஒட்டுமொத்த அரசியல் வழிவரைபடமே ஏறக்குறைய தோல்வியுறும் ஒரு கட்டத்தை நெருங்கி விட்டது.

குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தைக் கையாள்வது தொடர்பில் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் பெருந்தன்மையோடு நடந்து கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி முஸ்லிம் தலைவர்களுக்கு கணிசமான அளவு விட்டுக் கொடுத்திருக்கிறது.

வடமையத் தமிழ்த் தலைமகள் கோலோச்சிய ஒர் அரசியல் பாரம்பரியத்தில் கிழக்குத் தலைவர் ஒருவர் தமிழ்த் தலைமையாக மேலெழுந்த ஒரு காலகட்டம் இது. தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகமாக விட்டுக்கொடுத்த ஒரு காலகட்டம் இதுவெனலாம்.

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பிடம் பதினொரு ஆசனங்கள் இருந்தன. முஸ்லிம் தரப்பிடம் ஒன்பது ஆசனங்கள் இருந்தன. எனினும் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு முஸ்லிம் தரப்பிற்கு விட்டுக் கொடுத்தது.

அதைப் போலவே வடமாகாணசபை உருவாக்கப்பட்ட போது அதில் நியமன உறுப்பினராக ஒரு முஸ்லிமை நியமித்தது. எல்லாவற்றிலும் இறுதியாக அண்மையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் சில முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படலாம் என்ற ஒரு நிலமை எழுந்த பொழுது கூட்டமைப்பு முஸ்லிம்களின் பக்கமே நின்றது.

இவ்வாறாக கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு அதிகம் விட்டுக்கொடுத்த ஒரு காலகட்டமாக கடந்த பத்தாண்டுகள் காணப்படுகின்றன. இவ்வாறான விட்டுக்கொடுப்புக்களின் பின்னணியிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்கள் கூட்டமைப்பைப் பாதுகாக்கவில்லை.

எந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு முண்டு கொடுத்துப் பாதுகாத்து வருகிறதோ அந்த அரசாங்கமும் கூட்டமைப்பைப் பாதுகாக்கவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் அம்பாறைத் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு எதிராக திரும்பக்கூடிய நிலமைகள் அதிகரித்தன.

முஸ்லிம்களின் விவகாரத்தில் மட்டுமல்ல கடந்த நான்காண்டுகளாக அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் போன்ற எல்லா விடயங்களிலும் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த அணுகுமுறையே தோல்வியுற்று விட்டது.

அரச திணைக்களங்களில் தமிழ் மக்களுக்கு வேலை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று சம்பந்தரிடம் கேட்ட போது அற்ப சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் போக முடியாது அப்படிப் போனால் உரிமைகளைக் கேட்க முடியாது என்ற தொனிப்பட அவர் முன்பொருமுறை திருகோணமலையில் மக்கள் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

ஆனால் இப்பொழுது கம்பெரலிய, பனை நிதி போன்றவற்றின் மூலம் அரசாங்கத்தின் அபிவிருத்தி யுத்தத்தின் பங்காளியாக கூட்டமைப்பு மாறிவிட்டது.

தமிழ் பகுதிகளில் சில இடங்களில் எங்கே சிற்றொழுங்கைகள் உண்டு என்று தேடிப்பிடித்து அவற்றுக்கெல்லாம் தார் போடப்படுகிறது. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கோவில்களின் தேரோடும் வீதிகளுக்கும் தார் போடுகிறார்கள். ஆண்டின் ஒருமுறை மட்டும் தேரோடும் வீதிகளுக்கு காசைக் கொட்டி தார் போடப்படுகிறது.

அதே சமயம் மக்கள் அன்றாடம் பாவிக்கும் வன்னிக் கிராமங்களின் உள்வீதிகள் பல இப்பொழுதும் கிறவல் சாலைகளாகவே காணப்படுகின்றன.

கம்பெரலிய மற்றும் பனை நிதி போன்றவை பெரியளவிலான நீண்டகால நோக்கிலான அபிவிருத்தித் திட்டங்களுக்குரியவை அல்ல. அந்த நிதிகளை வரையறுக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தலாம். இந்த வரையறையானது உள்நோக்கமுடையது. அதாவது மேலோட்டமான சில அபிவிருத்திகளைச் செய்வதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம்.

நீண்ட கால நோக்கு நிலையில் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இந்த நிதி போதாது. ஆனால் அந்த மேலோட்டமான அபிவிருத்தியிலும் கூட சமனிலையற்ற தெரிவைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் கூட்டமைப்பிடம் இது தொடர்பில் ஒரு பொருளாதாரக் கொள்கை திட்ட வரைபு எதுவும் இல்லையென்பதே.

அப்படியொரு திட்ட வரைபைத் தயாரிக்கத் தேவையான ஒரு பொருளாதாரத் திட்டமிடல் குழுவும் அக்கட்சியிடமில்லை. இது விடயத்தில் மட்டுமல்ல. தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் குறித்த எல்லா விடயங்களிலும் குறிப்பாக வெளியுறவு, அபிவிருத்தியுட்பட உடனடிப் பிரச்சினைகள், நீண்டகாலப் பிரச்சினைகள் போன்ற எந்தவொரு விடயப்பரப்பிலும் நீண்டகாலத் திட்டமிடலுக்குத் தேவையான சிந்தனைக் குழாம்களோ ஆராய்சி மையங்களோ அக்கட்சியிடமில்லை. அதன் விளைவாகத்தான் நிதி கிடைத்ததும் அபிவிருத்தி இலக்குகளைத் தேடித்திரியும் ஒரு நிலமை காணப்படுகிறது.

யாப்புருவாக்கத்தின் பங்காளியாகவிருந்த கூட்டமைப்பு கடந்த ஆண்டு ஒக்ரோபர் ஆட்சிக்குழப்பத்தின் பின் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பங்காளியாக மாறியிருக்கிறது. யாப்பு முயற்சிகள் தோற்கும் என்று தெரிந்திருந்தும் அதில் பங்கேற்றதற்குக் காரணம் வெளிநாடுகளின் கோரிக்கைகளே என்றும் இப்பொழுது கூறப்படுகிறது.

இந்த அரசாங்கமும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத் தரப்போவதில்லை என்பதனை வெளிநாடுகளுக்கு நிரூபிப்பதற்காகவே யாப்புருவாக்கப் பணிகளில் ஈடுபட்டதாக ஒரு விளக்கம் தரப்படுகிறது. நாங்களாக எதிர்க்காமல் அவர்களாக அதைக் கைவிடும் போது வெளிநாடுகளுக்கு அதைச் சுட்டிக்காட்டலாம் என்றும் விளக்கம் தரப்படுகிறது.

ஆனால் 2016ம் ஆண்டு மன்னாரில் ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்? ‘ என்ற கருத்தரங்கில் இக்கட்டுரையாசிரியர் உரையாற்றும் போது இலங்கைத்தீவின் சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதம் வெளித்தரப்புக்களின் நிர்ணயகரமான பலப்பிரயோகமின்றி இலங்கைத்தீவில் ஓர் இறுதித்தீர்வைக் கொண்டு வராது என்று கூறியிருந்தார்.

இக்கருத்தரங்கில் இறுதியாகப் பதில் கூறிய சம்பந்தர் இக்கட்டுரையாசிரியரை நோக்கிப் பின்வருமாறு உரையாற்றினார். ‘சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதம் ஒரு தீர்வைத்தராது என்பது ஒரு வறட்டு வாதம்’ என்று. ஆனால் சில ஆண்டுகளுக்குள்ளேயே அது வறட்டுவாதமல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது மாவை சேனாதிராசா அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறி புலம்பத் தொடங்கிவிட்டார். சில நாட்களுக்கு முன் செல்வம் அடைக்கலநாதனும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதாவது ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கான கூட்டமைப்பின் செயல்வழி ஒரு முட்டுச்சந்தியில் வந்து இறுகி நிற்கிறது. ஆனால் தமது செயல்வழியின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலையில் அவர்களில்லை. அத்தோல்விக்குப் பொறுப்பேற்கும் நிலையிலும் அவர்களில்லை. மாறாக அத்தோல்வியை அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் அக்கட்சி திசை திருப்பப்பார்க்கிறது.

கல்முனையில் சுமந்திரனை நோக்கி வீசப்பட்ட செருப்புக்குப் பின்னால் பல நிகழ்ச்சி நிரல்கள் இருக்கலாம். ஆனால் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வுகளை அது குறிப்பால் உணர்த்துகிறது.

அம்பாறையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகள் எங்கும் நிலமை அப்படித்தான் இருக்கிறது. 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலைக் கையாளத் தேவையான தீர்க்கதரிசனமோ, தீட்சண்யமோ, மிடுக்கோ கூட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே சமயம் கூட்டமைப்பிற்குப் பதிலாக ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கலாம் என்ற நம்பிக்கைகளும் தேங்கிப் போய் நிற்கின்றன.

கூட்டமைப்பின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய புலம்பெயர்ந்த தரப்புக்களால் அக்கட்சியின் செயல் வழியைத் திருத்த முடியவில்லை. அக்கட்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சி ஒரு புதிய மிடுக்கோடு அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கவும் அந்த நிதி உதவிகளால் முடியவில்லை.

அதே சமயம் கூட்டமைப்பிற்கு எதிரான தரப்புக்களோடு உறவுகளைப் பேணும் புலம்பெயர்ந்த தரப்புக்களும் வெற்றி பெற்றதாகக் கருத முடியாது. கூட்டமைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு தார்மீக ஆதரவையும் நிதி ஆதரவையும் வழங்கி வரும் அமைப்புக்கள் அக்கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச ஒருங்கிணைப்பைத்தானும் ஏற்படுத்த முடியாதிருக்கின்றன.

இவை தவிர தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நடாத்தும் போராட்டங்களும் பெருமளவிற்கு சோரத் தொடங்கிவிட்டன. அங்கேயும் செயற்பாட்டுத் தலைமைகள் இல்லை. அப் போராட்டங்களுக்கு நிதி உதவி செய்யும் புலம்பெயர்ந்த தரப்புக்கள் அப்போராட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் மீதோ அல்லது கூட்டமைப்பின் மீதோ அல்லது உலக சமூகத்தின் மீதோ பொருத்தமான வலிமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியவில்லை.

எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தரப்பிலும் முழுத் தமிழ் மக்களையும் ஒன்று திரட்டி தமிழ் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எழுச்சிபெற வைக்கும் ஜனவசியமிக்க தலைமை எதையும் அரங்கில் காண முடியவில்லை. கூட்டமைப்பும் ஒழுங்கில்லை. மாற்றுத் தலைமையும் ஒற்றுமைப்படுவதாக இல்லை.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின் உருவாகியிருக்கும் புதிய உள்ளுர், பிராந்திய மற்றும் அனைத்துலகச் சூழலைக் கையாளவல்ல புதிய தரிசனம் மிக்க ஒரு தலைமை தமிழ் மக்களுக்குத் தேவை.