11 ரவுடிகளுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்..!

மானிப்பாய், சுன்னாகம், கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 ரவுடிகள் நேற்றய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனா்.
சந்தேகநபர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் 11ஆவது சந்தேகநபரை மட்டும் சாட்சி ஒருவர் அடையாளம் காட்டினார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்ச வனப்பதியில் கடந்த ஜூன் 17ஆம் திகதி மாலை வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள்
உள்ளிட்ட தளபாடங்களை அடித்து உடைத்து பெற்றோல் ஊற்றிக் கொழுத்தினர். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியது. அவர்கள் வினோதன் (ஆவா) என்பவரின் குழுவைச் சேர்ந்தவர்கள்
என்று காவற்துறையினர் தெரிவித்திருந்தனர். அத்துடன், தாக்குதலுக்குள்ளான வீடு தனுரொக் என்றழைக்கப்படுபவரின் உறவினர்கள் வசிக்கும் வீடு என்பதுடன் அங்கு நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்றும் காவற்துறையினர் கூறியிருந்தனர்.
இந்தத் தாக்குதலையடுத்து மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கு இருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் வாள்களால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.
அதனையடுத்து சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு இருந்த பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.இந்தச் சம்பவங்களை அடுத்து கொக்குவில் பகுதியில்
உள்ள மைதானம் ஒன்றில் கரப்பந்தாட்டம் விளையாடிவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய 10 பேரை யாழ்ப்பாணம் காவற்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஆவா குழுவில் முன்பு இருந்து அடாவடிகளில் ஈடுபட்டு வந்த அசோக் மோகன் என்பவரும் அடங்குகியிருந்தார்.
அத்துடன், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் நேற்று (ஜூலை 2) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதனடிப்படையில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.அடையாள அணிவகுப்பு நடந்தது.
11 சந்தேகநபர்களில் ஒருவரை மட்டும் சாட்சி ஒருவர் அடையாளம் காட்டினார். ஏனைய 10 சந்தேகநபர்களையும் அடையாளம் காண சாட்சி தவறினார். வழக்கை விசாரித்த நீதிவான், 11 சந்தேகநபர்களையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அனைவரும் 2 மாதங்களுக்கு ஒரு தடவை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்பமிடவேண்டும் என்றும் மன்று உத்தரவிட்டது.