ஹேமசிறி, பூஜித்தவுக்கு இன்று வரை விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்­களை குறைத்துக்கொள்வதற்கு நடவ­டிக்கை எடுக்காமை தொடர்பில் குற்­றஞ்சாட்டப்பட்டு இவர்கள் இருவரிடும் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக  வாக்குமூலம் பெற பொலிஸ் தலமைகம் அழைக்கப்பட்டனர். எனினும் இவர்கள் சமூகமளிக்காமல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலை­களில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்­கப்பட்டிருந்தனர்.
ஹேமசிறி பெர்னாண்டோ இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டி­ருந்ததுடன், காய்ச்சலுடன் கூடிய திடீர் சுகயீனம் காரணமாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்­பிட்டியில் உள்ள காவல் துறை வைத்­தியசாலையில் அனுமதிக்கப்பட்டி­ருந்தார்.
அந்தந்த வைத்தியசாலைகளில் அவர்க­ளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, நேற்று பிற்பகல் வைத்தியசாலைகளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் காவல் துறை அத்தியட்சர் ஒருவரின் மேற்பார்வையின் கீழான இரு சிறப்புக் குழுக்கள் அவர்களிடம் வாக்கு மூலம் பதிவுச் செய்து­கொண்ட பின்னர், அவர்களைக் கைது செய்தனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட இரு­வரும், சி.ஐ.டி.யினரின் பாது­காப்பின் கீழ் வைத்தியசாலைகளி­லேயே தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவி காவல் துறை அத்தியட்சர் ஒரு­வரின் கீழான அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன­வுக்கு மாலை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மாலை வேளையில் கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன கொழும்பு தேசிய வைத்திய­சாலைக்கும், நாரஹேன்பிட்டி காவல் துறை வைத்தியசாலைக்கும் சென்று சந்தேக நபர்களைப் பார்வை­யிட்டதுடன்  இன்று வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.