மரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் இலங்கையின் தீர்மானமானது மனித உரிமை விவகாரங்களில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் சார்ந்த அதன்  வாக்குறுதிகளை மனதிற்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

 

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் நால்வருக்கு விரைவில் அத்தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாகவும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமையை அடுத்து சர்வதேச நாடுகள், மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பலவும் அதற்கு தமது கண்டனைத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. அந்தவகையில் சுமார் 43 வருடங்களின் பின்னர் மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதுடன், கடந்த 43 வருடகாலமாக அத்தண்டனையை அமுல்படுத்தாமல் இடைநிறுத்தி வைத்திருப்பதை தொடர்ந்தும் இலங்கை பேணவேண்டும். இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நால்வருக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருக்கிறது.