யேமன் போரில் 7,500 சிறுவர்கள் பலி: ஐ.நா. அறிக்கை

யேமனில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

யேமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்துஇ 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை சிறுவர்களுக்கு எதிராக 11,779 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன.

இந்தச் செயல்களில், 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இதுதவிர, சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவது, எதிர்க் குழுவினருடன் தொடர்புடைய சிறுவர்களைக் கடத்திச் செல்வது போன்ற குற்றங்களும் நடைபெற்றுள்ளன.
2014-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில், அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

யேமன் போரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மிகத் துல்லியமாக கண்காணிப்பது இயலாது என்பதால், இந்த புள்ளிவிவரங்களைவிட உண்மை நிலவரம் மிகவும் மோசமானதாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்த அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் வெடித்தது. அதனைத் தொடர்ந்துஇ சலே பதவி விலகினாலும், அவருக்குப் பிறகு அதிபர் பொறுப்பேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.

இந்த நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியதுடன், தலைநகர் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
அதையடுத்து, மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.