தென்னிலங்கை மீனவர்களால் வலைகள் அறுப்பு உடமைகள் அழிப்பு

முல்லைத்தீவு சாலை பகுதியில் தங்கியிருந்து யாழ் மாவட்டத்தின் மருதங்கேணி பருத்தித்துறை காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக வடமராட்சிக்கிழக்கு சிறுதொழில் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் சாலை பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்கள் தாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஏழு கடல் கிலோ மீட்டர் தொலைவில் ஆழ் கடலில் அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய அட்டை தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் கரையோரமாக சுண்டிக்குளம் கேவில் கட்டைக்காடு உடுத்துறை நாகர்கோவில் ஊடாக பருத்தித்துறை காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் கடல் அட்டை பிடிப்பில் ஈடுபடுவதால் கரையில் உள்ள கரைவலை மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளில் தொழில் செய்யும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நாளாந்தம் தமது வலைகள் மற்றும் கரவலைகளும் அறுக்கப்படுவதாகவும் இதனால் தொடர்ந்தும் தாம் தொழிலில் ஈடுபட முடியாமல் இருப்பதாகவும் இவ்வாறு தாம் பாதிக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உட்பட பலருக்கும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறான தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயல் நடவடிக்கைகளால் தாம்த மது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்ததுடன் உரிய அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து தென்னிலங்கை மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்