ஈரானுடன் பதற்றம்: கத்தாரில் அமெரிக்க எஃப்-22 விமானங்கள் குவிப்பு

வளைகுடா பகுதியில் ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ரேடார் கண்களுக்குப் புலப்படாத தனது அதிநவீன எஃப்-22 ரக விமானங்களை கத்தாரில் அமெரிக்கா முதல் முறையாக குவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க விமானப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கத்தாரில் எங்களது அதிநவீன எஃப்-22 ராப்டர் வகை போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினரின் பாதுகாப்புக்காகவும்  அந்தப் பகுதியில் அமெரிக்க நலன்களைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளுக்கும்  ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.

இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஏற்கெனவே வளைகுடா பகுதியில் விமானம் தாங்கிக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள், கூடுதலாக 1,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பி வந்த நிலையில், தற்போது ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதி நவீன போர் விமானங்களையும் அந்த நாடு அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.