நுண்நிதி கொடுமை காரணமாக 60க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை

வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்கள் வறுமையின் காரணமாக கடன்களை மீள் செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பப் பெண்களின் நிலுவைத் தொகைக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் சுமையை அதிகரித்து மிரட்டி கையொப்பம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாத பெண்களை நிதி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்து நிலுவை கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கடன் செலுத்தாத காலப்பகுதிக்கு அதிகரித்த வட்டியோடு எழுதப்பட்ட புது ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுமாறு மிரட்டி கையொப்பம் பெறப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் விவசாயத்தை மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் குடும்பங்கள் மற்றும் கூலித் தொழில் செய்துவரும் குடும்பங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணத்தில் நுண்நிதி நிறுவனங்களின் இவ்வாறான நடவடிக்கை குடும்பப் பெண்களையும் அதன்மூலம் சிறுவர்களையும் பெரும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது.
வடக்கில் நுண்நிதி நிறுவனங்கள் ‘வட்டிக்காகங்களாக’ செயற்பட்டதன் கொடுமை காரணமாக 60க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் குடும்பப் பெண்களின் தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்துடனும், குடும்ப சீரழிவுகளை குறைக்கும் எண்ணத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிதி அமைச்சு 37 நுண்நிதி நிறுவனங்களை இனங் கண்டு 1414 மில்லியன் ரூபாவினை தள்ளுபடி செய்துள்ளது.
அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குறைவாக நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், யாழ் மாவட்டத்தில் 1096 பெண்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1580 பெண்களும், மன்னார் மாவட்டத்தில் 670 பெண்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 458 பெண்களும் இச்சலுகை மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கூடும் நுண்நிதி நிறுவனங்கள் கொடுக்கும் அறிக்கையை பெறும் வவுனியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் நுண்நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப பெண்களுக்கு எந்ந விதமான நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், அரசாங்கம் வழங்கிய ஒரு இலட்சம் ரூபா நிதி சலுகையை கூட பெற்றுக்கொடுக்க மாவட்ட செயலகம் முன்வரவில்லை என்பதுடன் நுண்நிதி நிறுவனங்களுக்கு சார்பாக வவுனியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.