தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும்

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இன்று (23.06) இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எங்களைப் பொறுத்தவரை 13 வது திருத்தச் சட்டம் ஒரு அடிப்படை. அது தீர்வல்ல. தீர்வு என்பது சமஸ்டியாகத் தான் இருக்க வேண்டும். ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைபின் மீது பொய்யான செய்திகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.

எவ்வளவோ விலைகளையும், உயிர்களையும் தீர்வுக்காக கொடுத்தவர்கள் நாங்கள். 13 வது திருத்தச்சட்டத்தை இந்தியாவிடம் கோருவதோ அல்லது அதை பெறுவதற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது நாங்களோ செயற்படவில்லை. 13 வது திருத்தச் சட்டத்திற்குள் முடங்குவதை நாங்கள் ஏற்கவில்லை. இனப்பிரச்சனை குறித்து பேசுவதற்கு 13 வது திருத்தச்சட்டம் ஒரு அடிப்படை. அது ஒரு அத்திவாரம். தீர்வு என்பது அதற்கும் அப்பால் செல்ல வேண்டும்.

அத்துடன், அண்மையில் இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடியுடன் சந்திக்க எங்களுக்கு 10 நிமிடங்கள் தான் தரப்பட்டது. அதனை உண்மையில் பெருமையான விடயமாக நான் பார்க்கின்றேன்.

வடக்கு – கிழக்கு மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியாவினுடைய பங்கு இருக்கின்ற படியால் தான் எங்களை அழைத்து சந்திக்கக் கூடிய வாய்ப்பு அமைந்திருந்தது. இந்தியா எங்களையுடைய கரையோர நாடு. இன்று சீனாவின் ஆதிக்கம் இந்த நாட்டில் கூடுதலாகவுள்ளது.

இந்தியாவினுடைய பாதுகாப்பு என்பது எங்களுடைய கரையோர பகுதிகளில் தங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்த பகுதியாக வடக்கு, கிழக்கு அமைந்திருக்கின்றது. இந்தநிலையில், எங்களுடைய இனப்பிரச்சனை தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்.

தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை வழங்க வேண்டும் என்பது எனது கருத்து. பிரதமர் மோடி வெற்றி பெற்று குறுகிய நாட்களுக்குள் ஏற்படுத்திய அந்த சந்திப்பு மூலம் இந்தியாவுடனான உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, நாங்கள் தொடர்ச்சியாக இந்திய பிரதமரையும், தமிழ் நாட்டு தலைவர்களையும் சந்திப்போம். எங்கள் தொடர்பாக ஒரு எழுச்சியை தமிழ் நாடு கொண்டிருந்தால் தான் டில்லி அரசாங்கத்தையும் நல்ல வழிக்கு கொண்டு வரமுடியும். அந்தவகையில் நாம் தமிழ் நாட்டையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.