தமிழருக்கு எதிரான அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு

இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று சனிக்கிழமை) வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்தும் நாட்டில் ஸ்திரமற்ற தன்மை நிலவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியிருந்தன. இந்நிலையில் மீண்டும் ஒருமாத காலத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிக்க அரசு தீர்மானித்தது. அதன்படி கடந்த மாதமும் அவசரகாலச் சட்டம் நாட்டில் அமுலில் இருந்தது.
இந்நிலையில் தற்போதும் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாமலே உள்ளது. தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.