65 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதியளித்திருக்கிறது என்று சென்னை த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

அவர்களின் புதிய விண்ணப்பங்களை எந்தவித தாமதமும் இன்றி மத்திய அரசாங்கத்திற்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரி  நீதியரசர் ஜீ.ஆர்.சுவாமிநாதன் பணித்தார்.

மனுதாரர்கள் இருக்கின்ற பிரத்யேகமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருத்தமான உத்தரவுகளை மத்திய அரசாங்கம் 16 வாரங்களுக்குள் பிறப்பிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.

மனுதாரர்களுக்குக் குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசாங்கத்தைப் பணிக்கும் எந்தவொரு நேர்மறையான ஆணையையும் பிறப்பிப்பதை நான் மனதாரத் தவிர்க்கிறேன். ஏனென்றால் குடியுரிமை விவகாரம் மத்திய அரசாங்கத்தின் பிரத்யேகமான நிறைவேற்றுச் செயற்களத்திற்குள் வருகிறது.

மனுதாரர்களுக்காக நான் பெரிதும் அனுதாபப்படுகிறேன்.ஆனால் நீதித்துறையைக் கட்டுப்படுத்தும் எல்லைக்கோட்டை நான் மனதில் கொண்டவனாக இருக்க வேண்டும்.

அதற்கப்பால் சென்றால் அது அத்துமீறலாகவே அமையும். எந்தவகையான அத்துமீறலும் கெடுதியானதே. நிறைவேற்றதிகார செயற்களத்திற்குள் நீதித்துறையின் அத்துமீறலும் அதற்கு விதிவிலக்கானதல்ல.

அது வழக்கு மீறிய அளவிற்குக் கெடுதியானது என்று சிலர் சொல்லக்கூடும் என்று நீதியரசர் சுவாமிநாதன் கூறினார்.

மனுதாரர்கள் செல்லுபடியாகக் கூடிய அனுமதிப்பத்திரங்கள் எதுவுமின்றி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தவர்கள் என்று மத்திய அரவும்ரூபவ் மாநில அரசம் வாதிட்டிருக்கின்றன.

அதனால் இவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள். 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கமைய இவர்கள் இந்தியக் குடியுரிமையை வழங்குவதற்குத் தகுதியுடையவர்கள் அல்ல என்பதே இரு அரசினதும் நிலைப்பாடாகும்.

ஆனால் இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது சரத்தின் உதவியை மனுதாரர்களினால் நாடமுடியும் என்றும், அந்த சரத்து இந்தியப் பிரஜைகளுக்கும், இந்தியப் பிரஜைகள் அல்லாதோருக்குத் பிரயோகிக்கப்படக்கூடியதே என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. மனுதாரர்கள் குடும்ப மரபு மூலமாக இந்திய மண்ணில் வேர் விட்டவர்கள்.

எமது மொழியைப் பேசுகிறார்கள். எமது கலாசாரத்திற்குச் சொந்தமானவர்கள். இந்தியாவைத் தங்களது நிரந்தர தாயகமாக்குவதற்கு உத்தேசித்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அத்துடன் அவர்களை இலங்கைக்கு வலுகட்டாயமாகத் திருப்பியனுப்பப் போவதில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருக்கிறது. அதனால் இந்த வழக்கு பிரத்யேகமான சூழ்நிலைக்குரியதாகின்றது.அவர்கள் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் கண்காணிப்பின் கீழ் 35 வருடங்களாக முகாம்களில் வாழ்ந்திருக்கிறார்கள். மிக நீண்ட காலமாக நாடற்றவர்களாக இருப்பதென்பது அந்திய அரசியலமைப்பின் 21 ஆவது சரத்தின் கீழ் அவர்களது உரிமை மீறப்படுகின்றது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மனுதாரர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு என்ற பகுதியில் இடைத்தரிப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய சிலர் வேறு இடைத்தரிப்பு முகாம்களில் இருக்கிறார்கள்.

காலனித்துவ காலத்தில் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் குடியேறிய தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அவர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து தங்களைப் பாதுகாப்பதற்காக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பியோடி வந்ததாகக் கூறுகிறார்கள்.

தங்களை இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஒரு பகுதியினராகக் கருதக்கூடாது.

அவர்கள் அகதிகளாகவே கணிக்கப்படுகிறார்கள் என்றும் மனுதாரர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.

தங்களைத் தாயகம் திரும்பிய இந்தியர்களாகக் கணித்து இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கிறார்கள்.