மைத்திரியின் வருகையை எதிர்த்து திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இந்த  ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாண ஆளுநரது செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெறவுள்ள  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாம் தமது உறவுகளை தொலைத்துவிட்டு இதுவரை காலமும்  தேடிவருவதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமக்கான தீர்வினை ஜனாதிபதி உடன் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஜனாதிபதியே வாருங்கள் எமக்கான தீர்வைத்தாருங்கள்’, ‘திருகோணமலையில் கால் பதிக்கும் ஜனாதிபதியே எம் கண்ணீருக்கு தீர்வு என்ன?’ எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.