சட்டமா அதிபரின் அதிரடி உத்தரவு : உயர் பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்க பதில் பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக  ஒன்பது உயர் பொலிஸ்  அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்துமாறு  சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடந்த வியாழக்கிழமை பணிப்புரைவிடுத்திருந்த  நிலையில் அந்த  பொலிஸ்  உயர்  அதிகாரிகள் மீதான உடனடி விசாரணைகளை மேற்கொள்ள பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

அதற்கமைவாக  இந்த ஒன்பது  பேர் தொடர்பான  விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு  குற்றப்புலனாய்வு  பிரிவினருக்கும்  ஆரம்ப கட்ட விசாரணைகளை  மேற்கொள்ளும் பொறுப்பு  பொலிஸ்  தலைமையக  விசேட  விசாரணை  பிரிவுக்கும்  ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு  அதற்கான ஆலோசனைகளையும் பதில் பொலிஸ்மா அதிபர்  பெற்றுக்கொடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.

கொழும்பு  பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் ஆறு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு  எதிராக  குற்றவியல்  மற்றும் ஒழுக்காற்று  நடவடிக்கைகளை  உடன்  எடுக்குமாறு சட்டமா  அதிபர் ஜனாதிபதி  சட்டத்தரணி  தப்புல டி  லிவேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான  விசேட  விசாரணைக்குழுவினரின் அறிக்கை  ஜனாதிபதியிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வறிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர்  இந்த  ஆலோசனையை  பதில் பொலிஸ்மா  அதிபருக்கு வழங்கியிருந்தார்.  இந்த நிலையிலேயே  அது தொடர்பிலான நடவடிக்கைகளை அவர் எடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.