கொன்சர்வேற்றிவ் கட்சியின் புதிய தலைமைத்துவம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகின்றது

கொன்சர்வேற்றிவ் கட்சியின் புதிய தலைமைத்துவம் குறித்த அறிவிப்பு இன்று(சனிக்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமை பதவியில் இருந்து பிரதமர் தெரேசா மே விலகுவதாக அறிவித்ததன் பின்னர் குறித்த தலைமை பதவியினை பிடிப்பதற்கான போட்டி அக்கட்சியின் உறுப்பினர்களிடையே வலுப்பெற ஆரம்பித்தது.

அந்த அடிப்படையில் 13 பேர் குறித்த பதவிக்காக போட்டியிடுவதாக தமது பெயர்களை அறிவித்திருந்த நிலையில் போட்டிக்கு முன்னரே சிலர் விலகியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 13-ஆம் திகதி முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் உள்ளிட்ட பலர் தோல்வியடைந்தனர்.

இறுதியாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 313 கொன்சர்வேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 160 பேர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட்டிற்கு 77 வாக்குகள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து, இரு போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, கட்சி உறுப்பினர்களிடையே தபால் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றியாளரின் பெயர் இன்றைய தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.