கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் கோரிக்கை எந்தவொரு இனத்திற்கும் எதிரானதல்ல -இலங்கை இந்து சம்மேளனம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு மத அடிப்படைவாதமே தடையாக உள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக கல்முனை பிரதேச தமிழ் மக்களால் வலுவான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் கோரிக்கையானது எந்தவொரு இனத்திற்கும் எதிரானதல்ல என்று இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.

 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி கடந்த 17 ஆம் திகதி முதல் ஐந்து பேரால் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள கிராமங்களையோ, நகரங்களையோ வெட்டி, ஒட்டி எல்லைகளை மாற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படப் போவதில்லை.

மாறாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு இயங்கிவரும் ஒரு பிரதேச செயலகத்தையே தரமுயர்த்துமாறு தமிழர்கள் போராடி வருகின்றனர். நாமறிந்த வரையில் இந்தப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு தீங்கும் ஏற்படாது.

உண்மையிலேயே நாட்டின் பல மாவட்டங்களில் மிகவும் சாதாரணமாகவே பல புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு,அவை எதுவித பிரச்சினைகளுமின்றி சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. அவ்வாறிருக்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் முஸ்லிம் மக்களைத் தூண்டி தமிழர்களின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது என தெரிவித்தார்.