இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகளிற்கு பாதிப்பு- அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள்

இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தவேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் மூவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான இல்ஹான் ஓமர்,பில்ஜோன்சன்,ஜிம் மக்கவன் ஆகியோர் அமெரி;க்க இராஜாங்க திணைக்களத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவேண்டும்,சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவேண்டும் உரிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கேட்டுக்கொள்ளவேண்டும் என மூவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் பதற்ற நிலை அதிகரிக்கின்றது அங்கு சமாதானம் பலவீனமான நிலையில் காணப்படுகின்றது  என இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை மோசமடையும் முன்னர் மத விவகாரங்கள் மற்றும் போர்க்குற்ற விவகாரங்களிற்கான தூதுவர்கள் உடனடியாக தலையிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அமெரிக்காவிலும் உலகநாடுகளிலும் மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் மோசமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாங்கள் இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் அதேவேளை யுத்தத்திற்கு பிந்திய நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான எங்கள் வலியுறுத்தல்களை தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என   ;,ஜிம் மக்கவன் தெரிவித்துள்ளார்

இலங்கை மக்கள் கடும் போராட்டத்தின் மூலம் பெற்ற இந்த உரிமைகள் பலவீனப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.