அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் திடீர் இரத்து

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தைத் திடீரென இரத்துச் செய்ததன் விளைவாக சர்ச்சைக்குரிய ‘படைகளின் அந்தஸ்த்து” உடன்படிக்கையிலிருந்து தற்போதைக்கு என்றாலும் இலங்கைக்கும் இடை ஓய்வு ஒன்று கிடைத்திருக்கிறது.

 

பயங்கரவாத எதிர்ப்பு, இந்து சமுத்திரத்திலும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்திலும் கப்பற்போக்குவரத்தின் சுதந்திரம், இலங்கைக்கான 48 கோடி டொலர்கள் அமெரிக்க மிலேனியம் சவால் ஒத்துழைப்பு நிதியுதவியைப் பயன்படுத்தும் வழிமுறைகள் போன்ற விவகாரங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்வரும் வியாழக்கிழமை (ஜுன் 27 ஆம் திகதி) பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் அதுவல்ல. அமெரிக்காவினால் பிரேரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சோஃபா உடன்படிக்கையிலுள்ள பிரச்சினையான சில பிரிவுகள் குறித்து ஆராய்ந்து, இணக்கமொன்றைக் காண்பதற்கு முயற்சிப்பதே அவரது பிரதான நோக்கமாகும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறின.

பொம்பியோவின் விஜயம் இரத்துச் செய்யப்படுவது குறித்து இவ்வார ஆரம்பத்தில் அறிவிப்பை வெளியிட்ட கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான அவரின் விஜயத்தின் போது தவிர்க்க முடியாத வகையில் நிகழ்ச்சி நிரல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அவரால் இத்தடவை இலங்கைக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்த இறுக்கமான நிகழ்ச்சி நிரலில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் செல்ல வேண்டிய பணியும் அடங்குகின்றது என்றும் தூதரகம் அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சோஃபாவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டிதை அடுத்து அந்த உடன்படிக்கை இலங்கையில் ஓர் அரசியல் கொந்தளிப்புக்குள் மாட்டிக்கொண்டது. இலங்கையின் சுயாதிபத்தியத்துக்குக் குந்தகமாக அமையக்கூடிய சில பிரிவுகள் சோஃபாவில் உள்ளடங்கியிருப்பதால் இதுகுறித்து கொழும்புக்குப் பாரதூரமான ஐயுறவுகள் இருக்கின்றன என்று வாஷிங்கடனில் அமெரிக்க அதிகாரிகளுக்குக் கூறுமாறு வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை ஜனாதிபதி பணித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவர் சோஃபாவை எதிர்க்கவில்லை என்றாலும், அதில் ஏற்புடையதல்லாத சில பிரிவுகள் இருக்கின்றன என்ற அபிப்பிராயத்தக் கொண்டிருக்கிறார்.

ஆனால் உடன்படிக்கையின் நுட்ப நுணுக்கங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து முழுமையாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினார்கள்.

பொம்பியோ இலங்கைக்கு வந்திருந்தால் கொழும்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்தப் பிரச்சினைகளை ஆராயக் கூடியதாக இருந்திருக்கும். சோஃபாவை பிரதானமாக எதிர்க்கின்ற ஜனாதிபதி சிறிசேனவையும் சந்தித்து, அவரின் சந்தேகங்களையும் போக்கி நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிசேனவைச் சந்திக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆனால் பொம்பியோ இலங்கைக்கு வரத்திட்டமிட்டிருந்த தினத்தில் சிறிசேன சீன நாடுகளான கம்போடியாவிற்கும், லாவோஸக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

இது தேர்தல் வருடம் என்பதால் சோஃபா போன்ற எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவது அரசியல் ரீதியில் தற்கொலை செய்வதை ஒத்தது என்று ஜனாதிபதி சிறிசேன கருதுகிறார்.

பொம்பியோவின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து சோஃபா தொடர்பான சர்ச்சையிலிருந்து இலங்கைக்கு ஒரு இடை ஓய்வு கிடைத்திருக்கிறது.