வீதி அபகரிப்பிற்கு எதிராக நாளை யாழ்பாணத்தில் மாபெரும் போராட்டம்!

யாழ்ப்பாண நகரப்பகுதியில் ஜிம்மா பள்ளிவாசலுக்கும் கே.கே.எஸ் வீதிக்குமிடையில் உள்ள ஒழுங்கை ஒன்றை சிலர் ஆக்கிரமித்து அதனை கேற் போட்டு மூடி தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்தும், அதனை மீண்டும் மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரியும் நாளை 22.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கே.கே.எஸ் வீதி பெசன் ஹவுஸ்இற்கு முன்னால் போராட்டம் ஒன்று நடாத்தப்பட உள்ளது.
குறித்த வீதி 1997ம் ஆண்டு இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்தது. பின்னர் 2011ம் ஆண்டளவில் அவ்வீதி இராணுவத்தினரால் விடப்பட்டது. அந்நிலையில் அவ்வீதியை முஸ்லீம்கள் சிலர் ஆக்கிரமித்து வீதியின் இரு வாசலையும் கேற் போட்டி மூடி உள்ளே அறைகள் சிலவற்றையும் கட்டியுள்ளனர். அதனை விட ரொப்பாஸ் என்ற புடவைக்கடைக்கான மின்பிறப்பாக்கியும் குறித்த வீதியின் நடுவிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து அப்பகுதி வர்த்தகர்களால் 2012ம் ஆண்டு யாழ் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இன்று வரை அதற்கு எதிராக ஒரு சிறய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்நிலையிலேயே நாளை போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த வீதியை ஆக்கிரமித்துள்ளோருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும் என்று போராட்ட ஒழுங்கமைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.