வவுனியா மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை ; பயணிகள் விசனம்

வவுனியா மன்னார் வீதியில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்படுத்திய குழியால் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வவுனியா பிரதேசத்தில் வீதியோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் நேற்று இரவு குளுமாட்டுச்சந்திக்கு அண்மையில் வவுனியா மன்னார் வீதிக்கு குறுக்காக குழாய் பொருத்துவதற்காக பாரிய குழி தோண்டப்பட்டுள்ளதுடன் இன்று காலைவரை (16.6) குறித்த வேலை முடிவடையாமையினால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் பிரதான வீதி அதிகளாவான போக்குவரத்து நிறைந்த வீதியாக காணப்படும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குழாய் பொருத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டிய நிலையில் மாற்று வீதி தொடர்பான ஒழுங்கான  தெளிவூட்டல்கள் கூட வழங்கப்படாமல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறித்த வேலையை மேற்கொண்டிருக்கின்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை  வீதியை முழுமையாக வெட்டி குழி தோண்டப்பட்டமை தொடர்பில் குறித்த வீதியை பயன்படுத்துவோர் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த வேலைப்பகுதிக்கு பொறுப்பானவருடன் தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் அங்கிருந்தவர்க்கு அவர் தொடர்பான விடயம் தெரியாமையினால் அவர்கள் பக்க கருத்தை கேட்க முடியாது போயுள்ளது.