அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’

அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அவர்களின் இந்தத் திட்டத்தை நாம் ஓரணியில் நின்று முறியடிப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடு திரும்பிய கையோடு இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ள பாதுகாப்புப் பிரிவினர், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களையடுத்து முஸ்லிம் சமூகத்தினர் சில கும்பல்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மீது குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைத்தே முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளைத் தற்காலிகமாகத் துறந்துள்ளனர். எனினும், அவர்கள் அரசுக்கே ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்களை அரசிலிருந்து எவரும் பிரித்தெடுக்க முடியாது. அவர்களும் ஆட்சியைக் கவிழ்க்கும் சதி முயற்சிகளுக்குத் துணைபோக மாட்டார்கள்.