டுபாயில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் வீடுகள் CID கடும் சோதனை!

டுபாயில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனையிட ஆரம்பித்துள்ளது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்.

இன்ரபோல் மற்றும் சவுதி, இலங்கை புலனாய்வுத்துறையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் மத்திய கிழக்கில் வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலை இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூல வேராக இவர்களே இருந்ததாக புலனாய்வு வட்டாரங்கள் கருதுகின்றன.குறிப்பாக இதில் ரிழா என்ற இளைஞர் பொறியியலாளர் என்றும் ஏமனில் அவர் சிலகாலம் தொழில்புரிந்தபோது ஐ எஸ் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மொஹமட் மர்ஸூத் மொஹமட் ரிழா (34) என்ற இவரின் மருதமுனை வீடு, உறவினர்களின் வீடுகளில் இன்று விசேட பொலிஸ் புலனாய்வுக்குழு சோதனை நடத்தியது.அத்துடன், அவரது நெருக்கமான உறவினர்கள் 8 பேர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஊடகவியலாளர் ஆவார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பெருமளவு பணம் வந்த விவகாரம் குறித்தும் புலனாய்வுத்துறை இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று இலங்கை கொண்டுவரப்பட்ட ஐவரும் – சஹ்ரான் குழுவின் உருவாக்கம், நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் என புலனாய்வு வட்டாரங்கள் கருதுகின்றன. கருத்துருவாக்கம், ஆலோசனைகளின் மூலம் சஹ்ரான் குழுவை இவர்களே வழிநடத்தினார்கள் என்றும், தாக்குதலின் முன்பாக பாதுகாப்பாக இலங்கையிலிருந்து வெளியேறியிருந்தார்கள் என்றும் புலனாய்வுத்துறை சந்தேகிக்கிறது