ரணில் – மோடி கலந்துரையாடல் காருக்குள்! காரணம் என்ன?

குறுகிய நேரப் பயணமாக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலை காருக்குள்ளேயே முடித்துவிட்டதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய இரண்டாவது பதவியை அண்மையில் ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அயல்நாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார்.ற்சனிக்கிழமை மாலைதீவுக்கான பயணத்தை மேற்கொண்ட மோடி, இன்று முற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றதுடன் அமைச்சர்களும் உடனிருந்தனர்.
இலங்கைக்கு வந்த பிரதமர் வெறும் நான்கு மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி, தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட அவர், ஜனாதிபதி வழங்கிய கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். முக்கியமான தலைவர்களைச் சந்தித்துப் பேசியது அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கேட்டுக் கொண்டார்.
குறுகிய நேரப் பயணம் என்பதால், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்தியா வருமாறும், அங்கு அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்றும் அவர் இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலை கட்டுநாயக்காவிலிருந்து வரும் வழியில் காருக்குள்ளேயே முடித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கலந்துரையாடலின் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று இந்தியப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.