இலங்கை மனித உரிமைகளை மதிக்கவேண்டும் அமெரிக்கா!

மனித உரிமைகளை மதிக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என அமெரிக்காவின் தென்னாசிய மத்திய ஆசிய விவகாரங்களிற்கான முதன் பிரதி உதவி செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் ஆசிய பசுபிக்கிற்கான வெளிவிவகார குழுவிற்கு சமர்ப்பித்துள்ள எழுத்துமூல அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையுடன் அமெரிக்கா தோளோடுதோள் நிற்கின்றது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் திறனை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா உதவுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறுபான்மையினத்தவர்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் அகதிகள் உட்பட அனைவரினதும் மனித உரிமைகளிற்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தேசிய தேர்தல்களிற்குள் நுழையும் இந்த தருணத்தில் இலங்கையை நல்லிணக்கம்,நீதி பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை காண்பிக்குமாறு அமெரிக்கா தொடர்ந்தும் வற்புறுத்தும் என அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.