முஸ்லிம் எம்.பிகள் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து முக்கிய ஆராய்வு!

பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அடுத்த கட்ட செயற்பாடு குறித்த Action Plan ஐ தயாரித்துள்ளதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டான தீர்மானத்திற்கமைய கடந்த திங்கட்கிழமை (03) முஸ்லிம் அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
இதன்போது Action Planனொன்றும் தயாரிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அஸ்கீரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அரச வைத்தியர் சங்கம் ஆகியவற்றினை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பாக தெளிவுபடுத்த தீர்மானித்துள்ளோம்” என்றார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா மற்றும் காதர் மஸ்தான் ஆகியோரும் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.