நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு – மஹிந்த அறிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவே இன்று அனைத்து தரப்பினர் மேலும் தாக்கம் செலுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஒரு தனி நபரை இலக்கு வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு தீர்வைக் காணவே இது கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன், இவ்விடயத்தை ஆளும் தரப்பினர் முழுமையாக தமது விருப்பத்திற்கு இணங்க அரசியல் பிரசாரமாக்கியுள்ளதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்த் தரப்பினர் முழுமையாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றனர் என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.