தோண்டி எடுக்கப்பட்டன பயங்கரவாதிகளின் சடலங்கள்!

சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டவர்களில் நான்கு பேரின் சடலங்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் உறவினர்கள் என அறியப்படும் ஒரு குழுவினர் சாய்ந்தமருதில் தாம் தங்கியிருந்த வீடொன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர்.

இதில் பெண்கள், சிறுவர்கள் என 15 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த நான்கு பேரின் சடலங்களே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் குறித்த சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு பரிசோதனைக்குட்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் மீண்டும் குறித்த சடலங்களை தோண்டியெடுத்து சடலத்தின் சிறு பகுதி பரிசோதனைக்குட்படுத்த தீமானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்கொலைதாரிகளின் சடலங்களை மீண்டும் பரிசோதனைக்குட்படுத்துவதற்காக கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தவிட்டதற்கமைய அம்பாறை நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸீமின் தந்தை, அவரின் இரு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரனின் மனைவி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது ‘சுனாமி கிராமத்தில்’ உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற மோதலின் பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

குறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும், 6 ஆண்களினதும், 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் தவிர்ந்த ஏனையவர்களின் சடலங்கள், கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகள் எதுவுமின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.