தெரிவுக்குழு முன்பாக பூஜித, ஹேமசிறி இன்று சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர். பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற  இந்த விசாரணைகள் காலை 11 மணிக்கு ஆரம்பமாகியிருந்தன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்குழுவின் பதில் தலைவர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமர்வில் முன்னாள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நாலக்க.டி.சில்வா சாட்சியமளித்திருந்தார்.
அன்றையதினம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர்கள் எவரும் சாட்சியமளிக்க வரவில்லை. இதனால் நாலக்க.டி.சில்வாவிடம் மாத்திரம் சாட்சியங்கள் பெறப்பட்டன.
உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லவில்லையென்று தெரியவருகிறது.
தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென பொலிஸ்மா அதிபராகவிருந்த பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
அவ்வாறு தான் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பூஜீத் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே அவர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்