பதற்றத்திற்கு மத்தியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர மந்திராலோசனை!

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போது அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

குறித்த மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இன்று காலை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கண்டிக்கு சென்றுள்ளதுடன், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.

அத்துடன், அதுரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போது கொழும்பில், பௌசி வீட்டில் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசியலில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.