சூழல்நேய சமூகத்தை உருவாக்குவதற்கு தேசிய சுற்றாடல் வாரத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில்  பழ மரக்கன்று ஒன்றினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டினார்.

 

ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலத்தை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதன்கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மே மாதம் 30ஆம் திகதி சுற்றாடலை துப்பரவு செய்தல் மற்றும் சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தினமாகவும் 31ஆம் திகதி வாயு மாசடைதலையும் அதன் தாக்கங்களையும் குறைப்பதற்கான தினமாகவும் ஜூன் 01 ஆம் திகதி மரநடுகைக்கான தினமாகவும் ஜூன் 02ஆம் திகதி நீர் மற்றும் நீர் மூலங்களை பாதுகாப்பதற்கான தினமாகவும் பெயரிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாடுஇ ஜூன் 03ஆம் திகதி உயிர் பல்வகைமையை பாதுகாப்பதற்கான தினமாகவும் ஜூன் 04ஆம் திகதி பேண்தகு காணி முகாமைத்துவத்திற்கான தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வளி மாசடைதலே தற்போது மனிதனின் சுகாதாரத்திற்கு பிரதான அச்சுறுத்தலாக விளங்குகின்றது. தற்போது உலக சனத்தொகையில் 10 பேரில் 09 பேர் உயிர் வாழ்வதற்கு பொருத்தமான வளியோட்டம் அற்ற சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கமைவாக அசுத்தமான காற்றை சுவாசிப்பதனால் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 7 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் சுமார் 4 மில்லியன் மக்கள் ஆசிய பசுபிக் வலய நாடுகளை சேர்ந்தவர்களென அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனாலேயே “வளி மாசடைதல்” ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் செயற்திட்டத்தின் இவ்வருட சுற்றாடல் தின தொனிப்பொருளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கையாகவே மரங்கள் வளிமாசடைதலைக் கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டிருப்பதனால் நாட்டில் சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்கு வனப் பரம்பலை சிறந்த முறையில் பேண வேண்டியது முக்கியமானதாகும். இதனாலேயே இலங்கையில் இவ்வருடம் சுற்றாடல் தினமானது “பேண்தகு வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைதலைக் குறைத்தல்” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் பல மர நடுகை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதனிடையே சூழல் நேய சமூகமொன்றை உருவாக்குவதற்காக சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.